போட்டிக் குழுத் தலைவர் கருணா லண்டனில் திடீர் கைது
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போட்டிக் குழுவை தொடங்கிய முரளீதரன் என்கிற கர்னல் கருணா, லண்டனில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். போலி பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவு தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென பிரபாகரனுக்கு எதிராக திரும்பிய கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்ற போட்டிக் குழுவைத் தொடங்கினார்.
இலங்கை ராணுவத்தின் முழு ஆதரவோடு புலிகள் இயக்கத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். இவரது ஒத்துழைப்புடன்தான் கிழக்கில் சில வெற்றிகளை இலங்கை படைகள் பெற முடிந்தது என்று கூறப்பட்டது.
சமீப காலமாக கருணா குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. அவரை இலங்கைப் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும், காவலில் அவர் இருப்பதாகவும் கூட செய்திகள் வந்தன.
சமீபத்தில் அவர் லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் இன்று காலை லண்டனில் கருணாவை, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கருணா கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனில் வைத்து அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்துள்ளனர். போலியான பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு வந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கருணா கைது செய்யப்பட்டிருப்பதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தற்போது அவர் மெட்ரோபாலிடன் போலீஸாரின் பிடியில் இருப்பதாக உள்துறை அமைச்சக அலுவலக தலைவர் ஜோ பாக்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கருணா சிக்கினார். இதுகுறித்து இலங்கை அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மேல் விவரங்களைத் தர அவர் மறுத்து விட்டார்.
கருணாவை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கருணாவை இலங்கை போலீஸார் கைது செய்வர். அவர் மீது இலங்கை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
காட்டிக் கொடுத்ததா இலங்கை?
இத்தனை காலம் இலங்கை அரசின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்த கருணா, திடீரென லண்டன் கிளம்பிப் போனதும், அங்கு திடீரென கைது செய்யப்பட்டிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
கருணாவை இலங்கை அரசே லண்டனுக்கு அனுப்பி வைத்து தற்போது அவரை இங்கிலாந்து போலீஸாரிடம் மாட்டி விட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழ்ச் செல்வன் மரணம், கருணாவின் கைது என அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்களால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications