விரைவில் அரியலூர் மாவட்டம் தொடங்கப்படும் - கருணாநிதி
சென்னை: கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் நிராகரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் விரைவில் தொடங்கப்படும். இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தயாளர்களிடம் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் கருணாநிதி பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்த அறிவிப்பை 1999ம் ஆண்டு மே 18ம் தேதி சட்டசபையில் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்திட அந்தப் பகுதியிலே உள்ள அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து அரசுக்குப் பரிந்துரை செய்ய அப்போதைய முதன்மை ஆணையரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பி.எஸ்.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
பாண்டியன் அளித்த பரிந்துரையின்பேரில், அரியலூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய மூன்று வட்டங்களையும் உள்ளடக்கி அரியலூர் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்குவதென்றும், குன்னம், வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து பெரம்பலூர் மாவட்டத்தை செயல்படுத்துவதென்றும், அரியலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதென்றும், தனி அலுவலர் ஒருவரை நியமனம் செய்து 27.12.1999 அன்று பூர்வாங்கப் பணி தொடங்கப்படலாமென்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.
ஆனால் அதன் பின்னர் வந்த ஜெயலலிதா ஆட்சியில், அரியலூர் மாவட்டம் என்பதே தேவையில்லை என்று கூறி கழக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை ரத்து செய்து விட்டனர்.
திமுக ஆட்சி கடந்த ஆண்டு மீண்டும் அமைந்த பிறகு அரியலூர் பகுதி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில், புதிய மாவட்டம் அமைவதற்கான பணிகளில் ஈடுபட்டபோது, அகில இந்திய சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்புப் பணியின் காரணமாக புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளினால் திட்டமிட்டபடி தொடங்கிட இயலவில்லை.
தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டு விட்டதால், முதல்வர் கருணாநிதி அரியலூர் மவட்டத்தை உடனடியாக தொடங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த மாதம் ஆணையிட்டதன் பேரில் அதிகாரிகள் மட்டத்தில் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டதன் அடிப்படையில், புதிய அரியலூர் மாவட்டம் செயல்படுவதற்குத் தேவையான அரசுப் பணியிடங்கள், வாகனங்கள், அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான அனுமதிகளை வழங்கி, ராமநாதபுரம், மதுரை, சேலம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று சென்னை திரும்பியவுடன் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய மாவட்டத்திற்கான ஆட்சித் தலைவர் விரைவில் நியமனம் செய்யப்பட்டு விரைவில் அரியலூர் மாவட்டத் தொடக்க விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications