இலவச டிவிக்களை கணக்கெடுக்க கலெக்டர் உத்தரவு
திருநெல்வேலி: தமிழக அரசு வழங்கும் இலவச கலர் டிவியை முறைகேடாக விற்பதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்புக்கு நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இலவச கலர் டிவி வழங்கி வருகிறது. தொடர்ந்து மூன்று கட்டமாக வழங்கப்பட்டு வந்த இலவச கலர் டிவிகள் நெல்லை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஒரு சிலர் இலவச கலர் டிவியை விற்பனை செய்து வருவதாகவும், கடையநல்லூர் பகுதியில் பெறப்பட்ட டிவிக்களை கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.
சில மாதங்களுக்கு முன் நெல்லையில் ஒரு சில ஷோரூம்களில் இலவச கலர் டிவிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் சென்று ஆயவு செய்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்களுக்கும் நெல்லை ஆட்சியர் ஒரு உத்தரவை பிறபித்துள்ளார். அதில் மாவட்டத்தில் இலவச கலர் டிவியை பயன்படுத்துவோரை கணக்கிடும்படி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சிவகிரி தாசில்தார் உத்தரவின் பேரில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வாசுதேவநல்லூர் துரைபாண்டி, புளியங்குடி ரவிக்குமார் மற்றும் 17 கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லைகுட்பட்ட வருவாய் கிராமங்களான தலைவன்கோட்டை, தாருகாபுரம், சங்கணபேரி, விஸ்வநாதபேரி, உள்ளாறு, கூடலூர், இனாம் கோவில்பட்டி, சங்குபுரம், மலையடிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள் கலர் டிவிகளை பயன்படுத்துகிறார்களா என்று கணக்கிட்டனர்.
தொடர்ந்து இந்த கண்காணிப்பும், கணக்கெடுப்பும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications