மைசூரில் பிறந்தாலும் நானும் தமிழச்சியே- ஜெயலலிதா
சென்னை: மைசூரில் பிறந்தாலும் நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். எனது உடம்பிலும் தமிழ் ரத்தம் தான் ஓடுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.ஈ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூலமாக அதிகாரப்பூர்வாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.
அதற்கு கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் எனது உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறது, அதனால் தான் இவ்வாறு எழுதினேன் என்கிறார். இவர் உடம்பில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதா
கருணாநிதி எந்த அர்த்தத்தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான்.
இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்த என்னையும் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தளவிற்கு எனக்கு தமிழின உணர்வு ஆரம்பம் முதலே இருந்துள்ளது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 1972ம் ஆண்டு என்னுடைய 24வது வயதில் கங்கா கவுரி என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூருக்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில் நான் அளித்த பேட்டி அங்குள்ள பத்திரிகைகளிலே வெளிவந்திருந்தது. அந்தப் பேட்டியில் நிருபர் நீங்கள் கன்னடியர் தானே என்று கேட்டிருந்தார். அதற்கு நான் இல்லை என்று தெரிவித்தேன்.
உடனே நிருபர் நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று சொன்னது மட்டும் அல்லாமல், நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய தாய்மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி என்றும் தெரிவித்தேன்.
இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டூடியோவிற்குத் திரண்டு வந்துவிட்டார்கள். அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் பி.ஆர்.பந்தலு, நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் ஆகியோரும் என்னுடன் படப்பிடிப்பில் இருந்தனர்.
திரண்டு வந்த அந்த கன்னட வெறியர்கள் சுமார் 1,000 பேர் வெளியிலே கூடி கன்னட துரோகியே மன்னிப்பு கேள், என்று பெரிய ரகளை செய்து படப்பிடிப்பு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து விட்டார்கள்.
கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம். நீ கன்னடியர் தான் என்று சொல் என மிரட்டினார்கள். நான் இல்லாததை எப்படிச் சொல்ல முடியும் என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை தாக்க வந்தார்கள். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வரவில்லை.
பிரச்சனை கட்டுப்பாட்டை மீறிக் கொண்டிருந்தது. பந்தலு இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகளை சேகரிப்பதற்காக சென்னையில் இருந்து தமிழ் பத்திரிக்கை நிருபர்கள் குழுவை அழைத்து வந்திருந்தார்.
அவர்கள் அங்கே தான் இருந்தார்கள், அவர்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. அந்தக் கன்னட வெறியர்கள் நீ கன்னடியர் என்று ஒத்துக் கொள். இல்லையென்றால் குத்துவோம், வெட்டுவோம் என்று கூச்சலிட்டார்கள். உடனிருந்த பந்தலு, ஜெமினிகணேசன் மற்றும் அசோகன் ஆகியோர் எதுக்கம்மா வம்பு, போலீஸ் வேறு பாதுகாப்புக்கு வரவில்லை.
அதனால் அவர்கள் கேட்பது போல் சொல்லிவிடு என்று கூறினார்கள். நான் அவர்கள் சொல்வதை ஏற்காமல், கன்னட மண்ணில், தமிழ் உணர்வுடன் வீரமறத்தியாக அன்றைக்கே நான் ஒரு தமிழச்சி என்று பெருமையுடன் சொன்னேன்.
கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ்நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை.
இதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்கள் சிங்களர்கள் என்ற சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கிறோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.
இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், அதிமுகவுக்கும் எப்போது பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமும் ஆகும்.
ஆனால் கருணாநிதி, கடந்த 2 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக்காமல் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைவிற்கு மட்டும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
இதன் தீவிரத்தை உணராது மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இந்த விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறேன் என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications