கேப்டன் பதவி வேண்டாம் - சச்சின்
மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கரை நியமனம் செய்ய அவரிடம் தேர்வாளர்கள் கேட்டதற்கு, நான் சாதாரண வீரராகவே இருந்து கொள்கிறேன் என்று நாசூக்காக கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டாராம்.
இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியதை அடுத்து இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு மகேந்திர சிங் டோணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் 20-20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
அதன் பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தாலும் சிறப்பாகவே விளையாடியது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.
ஒருநாள் போட்டிக்கு திறமையான அணியும், சரியான கேப்டனாக டோணியும் அமைந்து விட்டார். எனவே டெஸ்ட் போட்டிகளுக்கு தனியாக கேப்டனை நியமிக்கலாம் என்று தேர்வாளர்கள் முடிவு செய்தனர்.
தேர்வாளர்களின் தீவிர பரிசீலனையில், டெஸ்ட் அணிக்கு கேப்டனாகும் தகுதி உடையவர் சச்சின் என்று முடிவு செய்துள்ளார்கள். எனவே அவரை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்று பேச்சு நிலவியது.
ஆனால் திடீரென்று தேர்வாளர்களிடம் சச்சின், எனக்கு கேப்டனாக விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேர்வாளர்கள் அவரை மீண்டும் வற்புறுத்தியதற்கு நான் சாதாரண வீரராக இருந்தாலே போதும் என்று கூறி விட்டாராம்.
கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டால் வெற்றி, தோல்வி அனைத்தையும் சந்திக்க வேண்டி வரும். ஒரு போட்டியில் தோற்று விட்டாலும், உடனே விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டும். இது தனக்கு ஒத்து வராது என்பதாலும், ஏற்கனவே கேப்டனாக பொறுப்பு வகித்தபோது இந்த அவலங்களை சந்தித்த அனுபவத்தால் சச்சின் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பும் டோணிக்கே போய் சேரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications