தேவர் சிலை உடைப்பு - தேமுதிகவினர் கைது
சங்கரன்கோவில்: தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக 2 தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு கடந்த 4ம் தேதி நள்ளிரவில் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பல் கல் வீசி தாக்கியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். தேவர் சிலையை உடைத்தது அதே ஊரை சேர்ந்த குருசாமி, முருகன், காளிராஜ் மற்றும் ஒருவர் என அடையாளம் தெரிந்தது. இவர்கள் தேமுதிக பிரமுகர்கள்.
இதையடுத்து குருசாமி, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காளிராஜ் ஏற்கனவே பஸ் உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மற்றொருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட குருசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமுலத்தில் நாங்கள் தேமுதிகவைச் சேர்ந்தவர்கள். நாங்களும், மற்றொரு கட்சியினரும் கட்சி கொடி, கொடி கம்பங்களை நட்டபோது ஊரில் எதிர்ப்பு கிளம்பியது.
நமது சமுதாய தலைவர் சிலையையும், கொடியையும் தவிர வேறு கொடிகளை பறக்க விடக் கூடாது என சிலர் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து சிலையை சேதப்படுத்தினோம் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் வருகிறார்:
இதற்கிடையே, வேலாயுதபுரத்தில் சேதப்படுத்தப்பட்ட முத்துராமலிங்க தேவர் சிலையை பார்வையிட தமிழக பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் இன்று மதுரைக்கு விமானம் முலம் வருகிறார்.
அங்கிருந்து வேலாயுதபுரத்திற்கு வந்து சிலையை பார்வையிடுகிறார். பின்னர் காலை 11 மணிக்கு பத்திரிக்கையாளர்களை நெல்லையில் சந்திக்கிறார். கார்த்திக் வர உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications