விளாத்திகுளம் அருகே மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மீன் பிடித்த மீனவர் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளாத்திகுளம் அருகே வேம்பார் கிராமத்திலுள்ள மீனவர்கள், வெள்ளைசாமி தேவர் மகன் பிரபு என்பவருக்கு சொந்தமான படகில், கீழ் வைப்பாருக்கு அருகே உள்ள சல்லீத் தீவு பகுதியில் இன்று அதிகாலை கரைவலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீசிய வலையில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று சிக்கியது.
அதை உடனடியாக கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி சூரக்குடி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒரு அடி நீளம், அரை கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் லாஞ்சர் இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் பயன்படுத்தப்பட்டதா, அல்லது விடுதலை புலிகளுக்காக கடத்தி செல்லப்பட்டதா என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி தீபக் தமோரும் அங்கு சென்று அதனை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த ராக்கெட் லாஞ்சர் எந்த நாட்டில் தயார் செய்யப்பட்டது
என்பதை பரிசோதித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழக கடல்பகுதியில் ராக்கெட் லாஞ்சர்கள் சிக்குவது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications