மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் திருட்டு
நாகர்கோவில்: சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் இருவருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரயில், பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு நாகர்கோவில் ரயில்வே ஷெட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்த போது 2 பயணிகள் மயக்க நிலையில் இருந்தது கண்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து இருவரையும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களிடம் இருந்த திருமண பத்திரிக்கையை வைத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரை சேர்ந்த சவுந்திரபாண்டியன் தனது மகள் ஷோபனாவின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்துவிட்டு தனது உறவினர் சாமுவேலுடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் மதுரை திரும்பும் வழியில் மயக்கமடைந்துள்ளதாக தெரியவந்தது.
இருவருக்கும் நேற்றுஅதிகாலை நினைவு திரும்பியது. நடந்த சம்பவம் குறித்து சாமுவேல் கூறுகையில், நாங்கள் வந்த கோச்சில் வடமாநிலத்தை சேர்ந்த இருவர் உடன் வந்தனர். வெள்ளை உடை அணிந்திருந்த அவர்கள் இருவரும் இந்தி பேசினார்கள். முன்னாள் ராணுவ வீரரான எனக்கு இந்தி தெரியும் என்பதால் நானும் அவர்களுடன் நன்றாக பேசிக் கொண்டு வந்தேன்.
திருச்சியை நெருங்கியபோது பிஸ்கட் எடுத்து சாப்பிட்டனர். அதில் இரண்டை எங்களுக்கும் கொடுத்தனர். ஒரே பாக்கெட்டில் இருந்து எடுத்ததால் எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தலை சுற்றி மயக்கம் வந்து படுத்தது தான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பணம், மோதிரம் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் இருவரிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் இந்தியில் பேசியதால் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது.
வழக்கமாக சென்னையில்தான் இந்த மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வந்தனர். இப்போது அது கன்னியாகுமரி வரை பரவியுள்ளது ரயில்வே காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications