மாணவர்கள் பல்கலைக்கழகம் மாறிப் படிக்க புது வசதி
சென்னை: ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து இன்னொரு பல்கலைக்கழகத்திற்கு மாறி படிக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. முற்றிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
அதன்படி, ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் முதல் இரண்டு செமஸ்டர்களை அந்த பல்கலைக்கழகத்தில் முடித்து விட்டு, மற்ற செமஸ்டர்களை வேறு பல்கலைக்கழகத்தில் தொடரலாம்.
முதலில் படித்த பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு அவர் தேர்ச்சி பெற்றுள்ள பாடத்திற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த மதிப்பெண்களை வைத்துக் கொண்டு, அந்த மாணவர் வேறு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது செமஸ்டரில் இருந்து அதே படிப்பை தொடர முடியும்.
கிரெடிட் மாற்று முறை' எனப்படும் இந்த புதிய திட்டத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஒருசில பல்கலைக்கழகங்களில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் புதிய திட்டம் குறித்து இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழக இணைவேந்தர் லதா பிள்ளை கூறுகையில், ஒரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களை வைத்துக் கொண்டு, அடுத்த பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடரும் நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தரமான கல்வியைப் பெற இது உதவும். கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் ரெகுலர் கல்வி முறையையும் தொலைதுாரக் கல்வி முறையையும் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
கல்லுாரியில் சேர்ந்து முதலாண்டு படிக்கும் மாணவர் படிப்பை பாதியில் கைவிடாமல், இரண்டாம் ஆண்டில் இருந்து தொலைதூரக் கல்வி வாயிலாக படிப்பை தொடர முடியும். சில பல்கலைக்கழகங்கள் இரட்டை பட்டங்களை வழங்குகின்றன. அவ்வாறு வழங்குவது என்றால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications