பெனாசிர் பூட்டோ மீண்டும் கைது - வீட்டுக் காவல்!
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று இரவு மீண்டும் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷாரப்புக்கு எதிராக பெனாசிர் பூட்டோ போராட்டத்தில் குதித்துள்ளனர். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து சில தினங்களுக்கு முன்பு ராவல்பிண்டியில் மாபெரும் பேரணி நடத்த அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் புஷ், முஷாரப்பை போனில் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து பெனாசிர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து முஷாரப்புக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராடப் போவதாக பெனாசிர் அறிவித்தார். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி வாகனப் பேரணியை நடத்தப் போவதாக அவர் அறிவிப்பு விடுத்தார். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனால் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தலைநகரிலிருந்து லாகூருக்கு வந்தார் பெனாசிர். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் தேதியை முஷாரப் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் நவம்பர் 15ம் தேதிக்குள் அவர் அதிபர் பதவியிலிருந்தும், ராணுவத் தளபதி பதவியிலிருந்தும் விலகி விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பெனாசிர் பூட்டோ கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டார். வீட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு அரண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு பெனாசிர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications