மயூரா ஜெயக்குமார் தாக்குதல்: கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். கோஷ்டி மோதல் குறித்து ஆராய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கொலைவெறித் தாக்குதலில் மயூரா ஜெயக்குமார் படுகாயமடைந்தார். மேலும் இருவரும் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 132வது வார்டு கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோஷ்டி மோதல் குறித்து விசாரிக்க கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் அருண்குமார் நேற்று சென்னை வந்தார். முதலில் வேல்கம்புக் குத்தால் காயமடைந்து குணமடைந்து, ஓய்வில் இருந்து வரும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அரிவாள் வெட்டால் காயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மயூரா ஜெயக்குமாரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு சத்தியமூர்த்தி பவன் வந்த அவர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவத்தன்று என்ன நடந்தது என்று விசாரித்தார்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிருஷ்ணசாமி மீதான தாக்குதலின்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். இதனால்தான் உடனடியாக வர முடியவில்லை. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்தியா திரும்பியதும் முதல் வேலையாக கிருஷ்ணசாமியை பார்க்க வந்துள்ளேன்.

கிருஷ்ணசாமி வேகமாக தேறி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அரசு சிலரைக் கைது செய்துள்ளது. விசாரணைக் கமிஷனும் கூட அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையில்தான் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

எல்லா மாநிலத்திலும் கோஷ்டிப் பூசல்:

அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. இது பெரிய இயக்கம். பல்வேறு தலைவர்கள், அவர்களுக்கு ஆதரவாளர்கள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அனைவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு மக்களையும், தொண்டர்களையும் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்.

11ம் தேதி ஆயுதம் தாங்கிய கும்பல் சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்து மயூரா ஜெயக்குமாரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு விரோதமானது, கடும் கண்டனத்துக்குரியது.

எனவே ஆயுதம் தாங்கிய கும்பலுக்குத் தலைமை தாங்கி சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்து தாக்குதல் நடத்தியவரை (தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சைதை வில்லியம்ஸ்) கட்சியிலிருந்து நீக்க அனைத்து நிர்வாகிகளும் கூடி முடிவெடுத்துள்ளனர். அதன்படி அவர் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார்.

குமரியார் தலைமையில் குழு:

சம்பவத்தன்று என்ன நடந்தது, கோஷ்டி மோதலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமை வகிப்பார். சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர் டி.யசோதா, மூத்த தலைவர் ஜி.வடிவேலு ஆகியோரும் குழுவில் இடம் பெற்றிருப்பார்.

இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அளிக்கும் என்றார் அருண்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+