ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளாகின்றன
சென்னை: ஈரோடு, திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு இன்று அவசர சட்டத்தை நிறைவேற்றியது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இவை மாநகராட்சிகளாகும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகர்கள் மாநகராட்சிகளாக உள்ளன.
மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் சில நகராட்சிகளை மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டது.
இதன்படி ஈரோடு, திருப்பூர், அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பல நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக ஈரோடு மற்றும் திருப்பூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக இப்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதற்காக தமிழக அரசு இன்று 2 அவசர சட்டங்களை கொண்டு வந்தது. இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
ஈரோடு:
தந்தை பெரியார் ஈரோடு நகராட்சியின் தலைவராகப் பதவிப் பொறுப்பை ஏற்றிருந்தபோது 1917ம் அண்டு நவம்பர் திங்கள் 17ம் தேதி ஈரோடு நகராட்சியில் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் போன்ற பகுதிகளும் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
பெரியார் கண்ட அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் ஈரோடு நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி ஈரோடு நகராட்சி வரும் 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஈரோடு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுகிறது.
தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும்,
திண்டல், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, முத்தம் பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.
இவ்வாறு விரிவுபடுத்தப்படவுள்ள மாநகராட்சிப் பகுதிக்கான வார்டுகள் அமைத்தல், மண்டலங்கள் பிரித்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி செயல்படத் தொடங்கும்.
திருப்பூர்:
அதே போல பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் நகரம் முன்னணி இடத்தை வகிக்கின்றது. இந்நகரின் பிரமிக்கத்தக்க தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செம்மையான முறையில் அளிக்கும் வகையில் திருப்பூர் நகராட்சி மாநகராட்சியாக உயர்த்தப்படுகிறது.
2008ம் ஆண்டு ஜனவரி 1 முதல் திருப்பூர் மாநகராட்சியாகும். வேலம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும்,
தொட்டிபாளையம், ஆண்டி பாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகம்பாளையம், நெருப் பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிப் பகுதிகளும் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.
ஈரோடு, திருப்பூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்துவதற்கென தனித்தனியாக இரண்டு அவசரச் சட்டங்கள் இன்று பிறக்கப்பட்டுள்ளன என அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 8 ஆக உயரவுள்ளது.












Click it and Unblock the Notifications