கெளடா 'சூனியம்' செய்துவிட்டதாக எதியூரப்பா புகார்
பெங்களூர்: தேவெ கெளடா தனக்கு பில்லி-சூனியம் (செய்வினை) செய்து விட்டதாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தாலோ அல்லது தான் திடீரென இறந்தாலே அதற்கு கெளடாவின் குடும்பம் தான் பொறுப்பு என 7 நாள் முதல்வர் பொறுப்பை வகித்த பாஜக தலைவர் எதியூரப்பா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் மூலம் கர்நாடக அரசியல் மேலும் கீழ்த்தரமான நிலையை எட்டியுள்ளது.
எதியூரப்பா முதல்வராக தொடர கெளடா 12 நிபந்தனைகளை விதித்து அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி எதியூரப்பாவை அதில் கையெழுத்திட உத்தரவிட்டார். அதில் கையெழுத்து போட எதியூரப்பா தயார் தான் என்றாலும் பாஜக தலைமை அதை ஏற்கவில்லை.
இந் நிலையில் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டியவரான பாஜக எம்எல்ஏ ஸ்ரீ ராமுலுவை அமைச்சரவையில் சேர்க்க பாஜக முடிவு செய்தது. இதில் தான் பிரச்சனை வெடித்தது.
பெல்லாரி பகுதியில் ஏராளமான குவாரிகளை வைத்து நடத்தி வரும் ஸ்ரீராமுவுவுக்கும் அங்கு புதிதாக குவாரிகள் தொடங்கிய குமாரசாமி குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து குமாரசாமி மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார் ஸ்ரீராமுலு.
தன்னை ஆள் வைத்து கொலை செய்ய காண்ட்ராக்ட் கொலையாளிகளை (சுபாரி) குமாரசாமி அமர்த்தியுள்ளதாக ஸ்ரீராமுலு கூறவே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து கெளடாவின் நெருக்கடியால் ஸ்ரீராமுலுவை கட்சியை விட்டு நீக்கியது பாஜக. ஆனால், பெயரளவுக்கே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் அவர் நெருக்கமாகவே இருந்தார். பாஜகவின் முக்கிய கூட்டங்களில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவர் பங்கேற்று வந்தார்.
இதையடுத்து பாஜக-கெளடா இடையே மோதல் தீவிரமடைந்தது. பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க கெளடா மறுத்ததற்கும் இந்த ஸ்ரீராமுலு விவகாரம் ஒரு காரணம்.
இந் நிலையில் தான் பெரும் இழுபறிக்குப் பின் ஒரு வழியாக பாஜகவிடம் ஆட்சியைத் தர கெளடா முன் வந்தார். ஆனால், ஸ்ரீராமுலுவை ஒடுக்கும் நோக்கத்தில் கனிம வளத்துறையை தனது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
இந்த நிபந்தனையைத் தான் பாஜக தலைமை ஏற்க மறுத்தது. மேலும் கெளடாவை கண்ட்ரோலில் வைக்க ஸ்ரீராமுலுவையும் அமைச்சராக்க பாஜக திட்டமிட்டது. இது கெளடாவுக்கு பெரும் எரிச்சலைத் தந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குமாரசாமி-எதியூரப்பா இடையே நடந்த கூட்டத்தில் அனல் பறந்துள்ளது. ஸ்ரீராமுலுவை அமைச்சராக்குமாறு தனக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக எதியூரப்பா கூற, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் குமாரசாமி.
இதனால் வாக்குவாதம் எழுந்த நிலையில் கனிம வளத்துறையை தங்களிடம் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு குமாரசாமி நீட்டியுள்ளார். ஆனால், அதை வாங்கி எதியூரப்பா விசிறி எறிந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இரு தலைவர்களும் சிரித்த முகத்துடன் நிருபர்களுக்கு போய் கொடுத்துவிட்டுக் கலைந்தனர். பாஜக தனது நிலையில் பிடிவாதம் பிடித்ததால் ஆட்சியை கவிழ்த்தே விட்டார் கெளடா. இதன் மூலம் கொஞ்சம் கூட நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல பெயரை கெளடா வாங்கியுள்ளார்.
இந் நிலையில் தான் எதியூரப்பா பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனக்கு வந்த தகவலின்படி எனக்கு கெளடா பில்லி-சூனியம் வைத்துவிட்டார். இதனால் எனக்கு ஏதாவது நேர்ந்தாலோ அல்லது நான் திடீரென இறந்தாலோ அதற்கு கெளடா குடும்பம் தான் பொறுப்பு.
இந்த செய்வினையால் நான் பயந்து போய் இருக்கிறேன். செய்வினை தனக்கே திரும்பிவிடக் கூடாது என்பதற்காகத் தான் கெளடா தொடர்ந்து கோவில், கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றார் எதியூரப்பா.
20ம் நூற்றாண்டில், அதுவும் இந்தியாவின் ஹை-டெக் முகமான பெங்களூரை உள்ளடக்கிய ஒரு மாநிலத்தை 7 நாட்கள் ஆண்ட, தொடர்ந்து ஆள இருந்த ஒருவர் தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக ேபசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications