ஆன்லைனில் ஐ.ஐ.டி பாடங்கள்!
பெங்களூர்: பொறியியல் படிப்பை படிக்கும் மாணவர்களை, உரிய தகுதியுடன் பட்டதாரிகளாக்க உதவும் வகையில், ஐஐடி கல்வி நிறுவன பாடத் திட்டங்ளையும், போதனா முறையையும் ஆன்லைன் மூலம் வழங்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
நாட்டில் உள்ள பெருமை மிகு ஐஐடி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவாகவே உள்ளது. இந்த கனவு நிறைவேறாதவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐஐடியில் சேர முடியாத பலர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.
இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் இன்னும் சில மாதங்களில் ஆன்லைன் மூலம் ஐஐடி கல்வியைக் கற்கும் வாய்ப்பு அமலுக்கு வரவுள்ளது.
இந்தியாவில் உள்ள 6 ஐஐடி நிறுவனங்கள் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து ஆன்லைன் மூலம் போதனை மற்றும் பாடங்களை வழங்க தீர்மானித்துள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள 1500 பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரூ. 110 கோடி மதிப்பில் தீட்டியுள்ளது.
தற்போது பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளியேரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தப் படிப்புக்கேற்ற தகுதியுடனும், தரத்துடனும் வருவதில்லை என்று பல தனியார் நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையைப் போக்கவும், உயர் கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மெட்ராஸ் ஐஐடியின் பேராசிரியர் மங்கள சுந்தர் கிருஷ்ணன் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியைக் கொடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆசிரியர்களுக்கும் உரிய கல்வியறிவை ஊட்ட இந்தத் திட்டத்தில் வழி உள்ளது.
தற்போது பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய ஆசிரியர்கள், போதனா வசதிகள் இல்லாமல் கல்லூரிகளை நடத்தி வருகின்றன. இந்த அவல நிலையைப் போக்க இந்த ஆன்லைன் போதனா முறை உதவும். இதன் மூலம் பொறியியல் படிப்பை முடித்து விட்டும் மாணவர்கள் உரிய தகுதியுடன் வெளி வர முடியும் என்றார் அவர்.
மத்திய மனித வள அமைச்சகம் இந்தத் திட்டத்தை பல கட்டங்களாக நிறைவேற்றவுள்ளது. முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 20.5 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சிவில், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் 240 பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications