துரைமுருகன் சொல்லும் பச்சைப் பொய்-வைகோ
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டவில்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பச்சைப் பொய் சொல்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வேலூரில் நடந்த மதிமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில்,
திமுக ஆட்சியில் தமிழக மக்களின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை, காவிரி, பாலாறு பிரச்சனைகளில் நம் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உடைமை, உரிமை காக்கும் கடமையுணர்வு தமிழக அரசுக்கு இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்காது.
ஆந்திரா அரசு பாலாற்றில் அணை கட்டுகிறது. அதுகுறித்து பாமக, மதிமுக, அதிமுக போன்ற அனைத்து கட்சிகளும் ஆரம்பத்தில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தபோது அணை கட்டவில்லை. இது முற்றிலும் வதந்தி. பாலாற்றில் தண்ணீர் இல்லாதபோது எப்படி அணை கட்டமுடியும் என்று தமிழக அரசும், அமைச்சர் துரைமுருகனும் கிண்டல் செய்தனர்.
தமிழக அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. அமைச்சர் துரைமுருகன் பொறுப்பற்ற முறையில் அணை கட்டவில்லை என்று பச்சைப் பொய் சொல்கிறார். இது ஆந்திரா அரசுக்கு ஊக்கத்தை அளித்தது போல, அணை கட்டும் வேலை துவங்கிவிட்டது.
அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கும்போதே தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும். அதே போல, முந்தைய காலங்களில் கர்நாடகாவில் அணை கட்டும்போது அதை கருணாநிதி தடுக்க தவறிவிட்டார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு ஏற்கவில்லை. தீர்ப்பை நிறைவேற்ற மாட்டோம் என பகிரங்கமாகவே அறிவித்தனர். அதே போல அணையை உடைப்போம் என்று கேரள அரசு சொல்கிறது.
சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து 79 கி.மீ. பாதையை பாலக்காடு கோட்டத்தில் சேர்க்க மத்திய அரசை கேரளா முதல்வர் அச்சுதானந்தன் மிரட்டுகிறார். இதைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது.
ஆனால் பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என மத்திய அரசுக்கு சொல்லும் துணிச்சல் முதல்வர் கருணாநிதிக்கு ஏன் இல்லை. இந்தப் பிரச்சனைகளுக்காக மத்திய அரசுக்கு கருணாநிதி நிர்ப்பந்தம் செய்திருந்தால் மத்திய அரசு அணை கட்ட வேண்டாம் என ஆந்திர அரசை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
பாலாற்றில் ஆந்திரா அரசு அணை கட்டினால் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறப் போவதாக கருணாநிதி ஏன் மிரட்டவில்லை. பாலாறு பிரச்சனையில் தமிழக அரசு தன் கடமையைச் செய்யத் தவறி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. மத்திய அரசும் தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது.
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், ராடார் கருவிகளை வழங்கி வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி குரல் கொடுத்து வருகிறார். ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை மட்டும் இதுவரை அவர் ஏன் தட்டிக் கேட்கவில்லை.
தற்போது அமெரிக்காவும் இலங்கைக்கு நவீன ஆயுதங்களை தரப் போகிறது. இதை இந்திய அரசும், உலக நாடுகளும் எதிர்த்து சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின் வெட்டு, வன்முறை, கொலைகள் நடந்து வருகிறது. இதற்கு ஆளும் கட்சியே காரணம். குண்டர்கள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர். தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பரவி வருகிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications