வங்கிக் கடனுக்காக தாசில்தார் கையெழுத்தை போட்ட வாலிபர்
தென்காசி: வங்கியில் வீட்டு கடன் வாங்க தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர் அருகே உள்ள ஆவுடையனூர் பஞ்சாயத்தில் உள்ள கொண்டலூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் முருகன். இவர் வீட்டு கடன் வாங்க செங்கோட்டையில் வீடு கட்ட ஒரு வங்கியில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கொண்டு சென்றார்.
ஆனால் அவர் கொண்டு சென்ற விண்ணப்பத்தில் தாசில்தார் கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்தது, முத்திரை இல்லை. அதனால் முத்திரை வாங்கி வருமாறு அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
எனவே சக்திவேல் முருகன் தென்காசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்திரை வாங்க சென்றுள்ளார். விண்ணப்பத்தை வாங்கிப் பார்த்த தாசில்தார் அலுவலக அதிகாரிகள், அதில் போடப்பட்ட தாசில்தார் திருவேங்கடத்தின் கையெழுத்து போலி என்று கூறி போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சக்திவேல் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சுரண்டையை அடுத்துள்ள சிவகுருநாதபுரத்தை சேர்ந்த ஜவஹர் என்பவர் தான் தாசில்தார் கையெழுத்து வாங்கி கொடுத்ததாக சக்திவேல் முருகன் கூறியுள்ளார்.
தாசில்தாரின் கையெழுத்து என்ற பெயரில் ஜவஹரே கையெழுத்துப் போட்டதாகத் தெரிகிறது. போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications