காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட்

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று காமன்வெல்த் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று மாநாட்டில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து இறுதி செய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்து ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துள்ள பாகிஸ்தானை, சஸ்பெண்ட் செய்யும் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் இந்த முடிவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதுதுறித்து காமன்வெல்த் மத்திய குழு கூறுகையில், பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் அங்கு ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். அதுவரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கி வைக்கப்படுகிறது.
இது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டத.
காமன்வெல்த் அமைப்பின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
முஷாரப் அதிபராக நீடிக்கலாம்:
இதற்கிடையே, 2வது முறையாக அதிபர் பதவிக்கு முஷாரப் போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் எந்தத் தடையும் இல்லை என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நிலுவையில் இருந்த கடைசி மனுவையும் அது தள்ளுபடி செய்து விட்டது.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிடுவதை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தலை நடத்தத் தடை இல்லை என்று உத்தரவிட்டது. அதேசமயம், முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்புக்குப் பின்னரே முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அது கூறியிருந்தது.
இந்த நிலையில், அதிபர் முஷாரப் அதிரடியாக செயல்பட்டு நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். மேலும் நீதிபதிகளையும் கைது செய்தார். புதிய தலைமை நீதிபதியாக அப்துல் ஹமீத் டோகர் நியமிக்கப்பட்டார்.
இந்தப் புதிய சூழ்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு முஷாரப்புக்கு எதிரான 5 வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேற்று முஷாரப்புக்கு எதிரான கடைசி மற்றும் முக்கிய வழக்கை டோகர் தலைமையிலான முழு பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் முஷாரப் 2 வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலும், தேர்ந்தெடுக்கப்படுவதிலும் எந்தத் தடையும் இல்லை. ராணுவத் தளபதி பதவியில் இருந்தபடி அவர் அதிபராக போட்டியிடவும், நீடிக்கவும் எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.
இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் முஷாரப் 2 வதுமுறையாக அதிபராக பதவியேற்க இருந்து வந்த தடை நீங்கியுள்ளது. ஏற்கனவே அதிபர் தேர்தலில் அவர் பெரும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து விரைவில் முஷாரப் 2வது முறையாக அதிபராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications