திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் உற்சாகம்

நேற்று பெரிய கார்த்திகை எனப்படும் கார்த்திகைத் திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நேற்று நடந்தேறியது. நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணியளவில் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியில் பிரமாண்ட கொப்பரை வைக்கப்பட்டு அதில் நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்படுவதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட்டபடி பயபக்தியுடன் தீபத்தை வணங்கினர்.
மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
திருவண்ணாமலை தீபத்தை 15 லட்சம் பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தீபத் திருநாளையொட்டி பலத்த பாதுகாப்புக்கும், சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications