மலேசிய தமிழர்களை காக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

டெல்லி: மலேசியாவில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலனைக் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக் கட்சி எம்பிக்களும் தீவிரமான கோரிக்கை விடுத்தனர்.
ராஜ்யசபாவில் இந்த பிரச்சனையை திமுக எம்பியான திருச்சி சிவா கிளப்பினார். அவர் பேசுகையில்,
தங்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதை எதிர்த்தும், சம உரிமைகள் கோரியும் மகாத்மா காந்தியின் படத்துடன் அமைதியான ஊர்வலம் நடத்திய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது மலேசிய அரசு போலீசாரை விட்டு தாக்கி பலப் பிரயோகம் செய்துள்ளது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அந்த அமைதி ஊர்வலத்தில் வந்தவர்களை தாக்கியுள்ளனர். இது போன்ற ஏதேச்சதிகாரமான செயலை ஏற்கவே முடியாது.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு உடனே நடவடிக்கையில் இறங்கும் என நம்புகிறோம் என்றார்.
திமுக எம்பியான கனிமொழி பேசுகையில், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மனித நேயமற்றது. அந்த நாட்டின் வளர்ச்சிக்காக இவ்வளவு உழைத்த மக்களை மலேசியா இவ்வாறு நடத்துவது மிகவும் தவறு என்றார்.
அதிமுக எம்பியான மலைச்சாமி பேசுகையில், சம உரிமை கோரி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இயக்கத்தை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 64 இந்துக் கோவில்களை மலேசிய அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான ராா பேசுகையில், மலேசிய அரசின் செயல் மிகவும் கவலை தருகிறது. இந்திய வம்சாவளியினர் மலேசிய குடிமக்களாகிவிட்ட பின்னரும் அவர்களுக்கு சம உரிமை தரப்படவில்லை. அவர்களது மனித உரிமைகள் கூட மீறப்படுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எம்பியான நாராயணசாமி பேசுகையில், சீனர்களுக்கு சம உரிமை தந்துள்ள மலேசிய அரசு இந்தியர்களுக்கு அதைத் தர முப்பது ஏன். எந்தத் தவறும் செய்யாத இந்தியர்களை தாக்கி சிறையில் தள்ளியது ஏன். இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இது குறித்து மலேசிய அரசுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டிப்புடன் பேச வேண்டும் என்றார்.
உறுப்பினர்களின் கவலையை பகிர்ந்து கொண்ட அவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான், இந்த அவையின் ஒட்டு மொத்த கவலை இது. இதை வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரியின் கடமை என்றார்.
இதற்கு பதிலளித்த பச்செளரி, இது குறித்து முகர்ஜியுடன் பேசுவேன் என்றார்.
மக்களவையில் இணையமைச்சர் இளங்கோவன் பேசுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து மலேசிய அரசு விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட மலேசியாவிற்கு உரிமை இல்லை என்றார்.
முன்னதாக கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்து மலேசிய நீதித்துறை அமைச்சரும் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சருமான நஸ்ரி அஜீஸ் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்பிக்களும், அமைச்சர்களும் மக்களவையில் அவையின் மையப் பகுதியில் வந்து நின்று கண்டனம் தெரிவித்தனர்.
மலேசிய அமைச்சரைக் கண்டித்து குரல் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications