மலேசியா-கருணாநிதிக்கு பாஜக ஆதரவு
கொச்சி: மலேசிய நாட்டு உள் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடவில்லை என பாஜக கூறியுள்ளது.
அக் கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில்,
மலேசிய தமிழர்களின் நலனை பாதுகாக்கக் கோரி இந்தியப் பிரதமருக்குத் தான் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதில் எந்தத் தவறும் இல்லை. அவர் மலேசிய உள் விவகாரத்தில் தலையிட்டதாக அந்த நாட்டு அமைச்சர் பேசியது தவறு.
கருணாநிதிக்கு எதிராக அந்த அமைச்சர் பயன்படுத்திய வார்த்தைகள் சரியல்ல. தனது நாட்டைச் சேர்ந்த வம்சாவளியினர் பாதிக்கப்படும்போது அது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு தலைவர் கோரிக்கை விடுப்பது எந்த விதத்திலும் தவறே அல்ல.
இதே போன்ற பிரச்சனை தான் வளைகுடாவில் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வளைகுடாவை விட்டு திரும்பி வந்துள்ளது. இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு இந்தியா நிரந்தர குடியுரிமை தந்து பாதுகாக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு அடைக்கலம் தருவது அவசியம். இதை இந்தியா பல காலமாக செய்து வருகிறது. தஸ்லிமாவுக்கும் அடைக்கலம் தர வேண்டும்.
தஸ்லிமா விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளின் உண்மையான உருவம் வெளிப்பட்டுவிட்டது. மனித உரிமைகள், மதசார்பின்மை, கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாகக் கூறும் இடதுசாரிகள் மதவாதிகளுக்கு பயந்து தஸ்லிமாவை மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இதன்மூலம் அடிப்படைவாதிகளிடம் இடதுசாரிகள் சரணடைந்துவிட்டனர்.
மற்றவர்களை பாசிஸ்டுகள் என விமர்சிக்கும் இடதுசாரிகளின் உண்மை நிறம் வெளியாகிவிட்டது. தஸ்லிமா இந்தியாவில் அகசியாக வாழ்பவர், அவருக்கு உதவ யாருமில்லை. இதனால் அவருக்கு அடைக்கலம் தர வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார்.
தஸ்லிமா விவகாரத்தில் இப்படி பேசும் பாஜக ஒவியர் எம்எப் ஹூசேன் விஷயத்தில் மட்டும் வேறு கருத்து கொண்டிருப்பது ஏன். இது இரட்டை வேடம் ஆகாதா என்று கேட்டதற்கு பதிலளித்த நாயுடு,
இரண்டுமே வேறு வேறு பிரச்சனைகள். ஹூசேனை யாரும் நாட்டை விட்டு விரட்டவில்லை. அவராகத்தான் துபாயில் வசிக்கிறார். அது அவரது சாய்ஸ் தான். அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறி வைப்பதை ஹூசேன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications