For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை-விஜய்காந்த்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: பொது மக்களுக்கு இடையூறு தரும் எந்த ஒரு போராட்டத்தையும் நான் நடத்த மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் தேமுதிகவில் இணையும் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது,

காலையில் கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்யும் முதல்வர் கருணாநிதி, மாலையில் கூட்டணிக் கட்சிகள் ரயில் பெட்டி போல இணைந்து செயல்பட வேண்டும் என்றுக் கூறுகிறார்.

நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம். எங்கள் கூட்டணி மக்களுடன்தான். இதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டு வருகிறேன்.

தேமுதிக மக்கள் செல்வாக்கை பெற்று வருவதால் அரசு எனக்கு பல இடையூறுகளை செய்து வருகிறது. சொத்தை அழித்தார்கள். நான் தாங்கிக் கொண்டேன்.

அவர்களுக்கு மக்கள் நலன் மீது துளியும் அக்கறை கிடையாது. கூட்டணிக் கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதில்தான் அக்கறை உள்ளது. இதனால்தான், கூட்டணி கட்சி நெருக்கடி காரணமாக துணை நகர திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம் என அனைத்தையும் கை விட்டார்கள்.

கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால் மருத்துவ மாணவர்கள் 3ம் தேதிக்குள் கல்லூரிக்கு செல்லவில்லை என்றால் கல்லூரிகளை பூட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்கச் செய்ய ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் துணை முதல்வராக அமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

அரசியல்வாதிகள் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் எந்தவொரு போராட்டத்தையும் நான் நடத்த மாட்டேன். பஸ் மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தினால், அதில் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல. சாதாரணமான பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

என்னுடைய அறிக்கைகளை கொஞ்சம் மாற்றி, அரசு திட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன. அரசு, மக்களுக்கு நல்லது செய்தால் எனக்கு சந்தோஷம் தான். சாவதற்குள் என்னை வாழ வைத்த மக்களுக்கு கைமாறு செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி ஆட்சி செய்தது போதும். இனியாவது அவர்கள், நல்ல கட்சியை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கை உடைய தேமுதிகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

மந்திரிகளுக்கு உள்ளம் ஊனம்:

இந் நிலையில் சர்வதேச ஊனமுற்றோர் விழாவை முன்னிட்டு தேமுதிக சார்பில் சென்னையில் ஊனமுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயாகாந்த் பேசியதாவது,

ஊனமுற்றோருக்கு என்று தமிழகத்தில் நல வாரியம் உள்ளது. அந்த வாரியத்தால் ஊனமுற்றோருக்கு எந்த உபயோகமும் கிடையாது. ஊனமுற்றோர் நிதியை அரசியல்வாதிகள் வாரிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

ஊனமுற்றோர் எந்த உதவி கேட்டுச் சென்றாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஊனமுற்றோருக்கு என்று சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏன் அரசால் செய்ய முடியாது. மனசு இல்லாததுதான் காரணம்.

ஊனமுற்றோருக்கு உடல்தான் ஊனமே தவிர உள்ளம் அல்ல. இங்குள்ள மந்திரிகளுக்கு உள்ளம் ஊனமாக உள்ளது. நல்லது செய்ய பயப்படுகிறார்கள்.

தேமுதிகவில் உள்கட்சி பிரச்சனை இருப்பதாக வதந்தியை பரப்புகிறார்கள். 50 ஆண்டு கட்சியில் எப்படி பிரச்சனைகள் உள்ளதோ, அதே போல எல்லாக் கட்சிகளிலும் சிறு, சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இவர்கள் அதை ஊதி பெரிதாக்க பார்க்கிறார்கள்.

இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை 5 தேர்தல்களை சந்தித்து விட்டேன். கஷ்டங்கள் பழகிவிட்டது. நான் இப்போது தைரியமாக இருக்கிறேன். எனவே என்னால் தொடர்ந்து செயலாற்ற முடிகிறது. அதுபோல ஊனமுற்றவர்களும் மன தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் என்றால் அரசு உதவிகள் மறுக்கப்படுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். பரவாயில்லை, 5 ரூபாய் கொடுத்து அந்த கட்சியின் உறுப்பினர் அட்டையையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 500 ரூபாய் டிவி கிடைக்கும்.

அது உங்கள் பணம். அதைப்பெற தயங்கக் கூடாது. வரும் காலங்களில் ஊனமுற்றோருக்கு அதிக நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X