டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுறுவல் - பலத்த பாதுகாப்பு
டெல்லி: லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹூஜி ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பயங்கர தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் ஊடுறுவியிருப்பதாக வந்துள்ள உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஹூஜி ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பயங்கர தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுறுவியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த 6 பேரும் டெல்லியில் பயங்கர நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட், செங்கோட்டை, நாடாளுமன்றம் உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணா, உ.பி. மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று டெல்லி மாநகர காவல்துறை இணை ஆணையர் ஆனந்த மோகன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
