தமிழகம் முழுவதும் மழை தொடரும்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உட்பட தமிழகமெங்கும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்தது.
சென்னை நகரில் காலை முதல் பெய்த கன மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு
செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடலோர மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் எவரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரியில் தொடரும் கடல் சீற்றம்:
இதற்கிடையே, கன்னியாகுமரியில் பயங்கர சூறாவளி காற்று வீசுவதை தொடர்ந்து திருவள்ளூவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று காலையும் சூறாவளி காற்று தொடர்ந்தது. இதனால் கடலில் சீற்றம் காணப்பட்டது. கடல் அலை 15 அடி உயரத்துக்கு மேல் எழும்பி ஆக்ரோசமாக கரையை வந்து மோதி சென்றது.
கன்னியாகுமரி, மேலமணக்குடி, கோவளம், சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டிணம், ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகிய இடங்களுக்கு நேற்று படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வழக்கமாக படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கும். கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து தொடங்கபடவில்லை.
தற்போது சீசனையோட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க ஆவலுடன் வந்த அவர்கள் படகு போக்குவரத்து இயக்கப்படாதாதல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளின் சீற்றம் அதிமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கரையில் நின்று குளித்தனர்.












Click it and Unblock the Notifications