மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும் புதிய அணை கட்டுவோம்-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தராவிட்டாலும் புதிய அணை கட்டுவது உறுதி என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முல்லை பெரியாறு நிலவரம் குறித்து ஒரு மனு கொடுத்தோம். அதில் முல்லைப் பெரியாறு அணை இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழை காலத்தில் நீர் மட்டம் உயரும் போது அணை பகுதியில் உள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகின்றனர்.
கடந்த 1979ல் மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டது. அப்போது தமிழக அதிகாரிகளும், கேரள அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய அதிகாரிகள் பார்வையிடும்போது நீர்மட்டம் 142 அடியாக இருந்தது.
அணையை பரிசோதித்த மத்திய அதிகாரிகள் அணை அபாயகரமாக உள்ளதாகவும், நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்கவேண்டும். விரைவில் புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறினர்.
புதிய அணை கட்டுவதற்கான இடத்தையும் அவர்கள் தேர்வு செய்ததற்கு, தமிழக அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் தான் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளோம். மத்திய அரசு அதிகாரிகளிடம் அணை கட்ட சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, இப்போது எதற்காக மறுப்பு தெரிவிக்கிறது என்று தெரியவில்லை.
முல்லைப் பெரியாறு அணையில் சில பகுதிகளை மட்டும் தமிழக அரசு இப்போது புதுப்பிக்கும் பணிகளை செய்து வருகிறது. இனிமேலும் தமிழக அரசு கூறும் வாதத்தை ஏற்கமுடியாது. புதிய அணை கட்ட அனுமதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.
அணை கட்டுவதற்கு பொதுமக்களிடமே பணம் வசூலித்து கட்டுவவோம் என்று அந்த மனுவில் கூறியுள்ளோம்.
மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இந்த மாதம் 19ம் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் மாநாட்டில் பங்கேற்க எல்லா மாநில முதல்வர்களும் வருகின்றனர். இந்த கூட்டத்தின் போது தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தலாம் என பிரதமர் கூறியுள்ளதாக அச்சுதானந்தன் தெரிவித்தார்.
பிரதமர் இரு மாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அச்சுதானந்தனின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications