சட்டமன்ற குழுவிடம் ஒரே நாளில் குவிந்த 312 மனுக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில், 312 மனுக்கள் குவிந்தன. இதில் 153 மனுக்கள் பரீசிலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
13 பேர் கொண்ட சட்டமன்ற மனுக்கள் குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. அரசு தலைமை கொறடாவும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏவுமான
சக்கரபாணி தலைமையில் வந்த இக்குழுவில் நெல்லை மலைராஜா, முதுகுளத்தூர் முருகவேல், ஒமலூர் தமிழரசு உள்ளிட்ட எம்.எல்.ஏக்களும், குழுச் செயலாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் மீனாட்சி, சார்பு
செயலாளர் சிங்கராவேலு ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை கலெக்டர் பழனியாண்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் முத்து
அரங்கத்தில் மனுக்கள் குழுவின் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி அன்பரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டு 153 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன.
கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதியன்று வந்திருந்த மனுக்கள் குழு
ஆய்வின்போது பரிசீலனை செய்யப்படாத 20 மனுக்கள் நேற்று மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பின்னர் மனுக்கள் குழுவினர் தூத்துக்குடி திரேஸ்புரம் கடலில் ரூ.7.10 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணிகளை பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications