கார் கண்ணாடிகளில் 'சன் கண்ட்ரோல் பிலிம்' ஒட்ட தடை!

சென்னை: வாடகைக்கு இயக்க அனுமதி பெறாத தனியார் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகலுக்கு நீல வண்ணம் பூசப்பட வேண்டும். கார்களில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வாடகைக்கு இயக்க அனுமதி பெற்றுள்ள வாகனங்களான ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் வாடகைக்கு இயக்க அனுமதி பெறாமல், அதாவது பெர்மிட் காலம் முடிந்தும் இயக்கப்படும் இதே வாகனங்களும் அதே நிறத்தில்தான் உள்ளன.
இப்படிப்பட்ட முறையான அனுமதி பெறாமல் இயக்கப்படும் அந்த வாகனங்களில் பயணம் செய்து ஏதாவது விபத்து நேரிட்டால் அதில் பயணம் செய்பவர்களுக்கு விபத்து காப்பீடு எதுவும் கிடைக்காது.
இதனால் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989ல் விதி 364ன் படி வாடகைக்கு அனுமதி பெறாத ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் மினி பேருந்துகளுக்கு வான் நீல நிறம் பூசப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாது அந்த வாகனத்தில் முன்னும், பின்னும் வாடகைக்கு அல்ல (Not for hire) என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நீலவண்ணம் பூசப்பட்டு வாடகைக்கு அல்ல என்று எழுதப்பட்டிருக்கும் வாகனங்களில் பயணிக்க வேண்டாம் எனவும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூலிங் பேப்பர் ஒட்டத் தடை:
இதுதவிர தனியார் வாகனங்கள், அரசு வாகனங்கள் மற்றும் விஐபி, விவிஐபிக்கள் செல்லும் அனைத்து வாகனங்களிலும் உள்ளே அமர்ந்துள்ளவர்கள் வெளியில் தெரியாதவாறு கறுப்பு பிலிம் (சன் கண்ட்ரோல் பிலிம்) ஒட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் உள்ளே அமர்ந்திருப்பவர்கள் தெரியாது. ஆனால் உள்ளேயிருந்து பார்த்தால் மட்டும் தெரியும். இதனால் சில சமூக விரோத செயலுக்கும், தீவிரவாத செயலுக்கும் இடமளிப்பதால் இதனை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்தது.
அதன்படி வாகனங்களில் பொருத்தப்படும் இதுபோன்ற கூலிங் ஸ்டிக்கர்கள், கண்ணாடிகளின் தரம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையின் சதவீதம் பற்றியும் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாகனங்களில் முன்புறம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் இந்த முடிவினை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது, முதல் குற்றத்திற்கு ரூ.100ம், 2வது மற்றும் தொடர்ச்சியாக குற்றம் செய்தால் ரூ.300ம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications