ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
பொறியாளர் மாறன் என்பவர் அங்கு கட்டுமானப் பணி செய்து வந்த மோகன் என்பவரிடம் துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பார்க்குமாறு சொல்லியுள்ளார். கழிவு நீர் பகுதியிலிருந்து தான் நாற்றம் அடிக்கிறது என மோகன் கூறியதையடுத்து, கழிவுநீர் சாக்கடை அடைப்பை எடுத்துவிடுமாறு இன்ஜீனியர் மாறன் கூறியுள்ளார்.
இதனையடுத்து மோகன் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். இறங்கிய சில நிமிடத்தில் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாறன் தொட்டிக்குள் எட்டிப் பார்த்ததில் அவரும் விஷவாயு தாக்கி மயங்கி கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விட்டார்.
இதனையடுத்து இருவரையும் காப்பாற்ற தொழிலாளிகள் முத்து, த்ருஷ் இருவரும் வேகமாக கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கியதில் பலியாகிவிட்டனர்.
4 பேரும் பிணமாக இரவு வரை கழிவு நீர் தொட்டிக்குள் கிடந்தது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரமாக அவர்களை காணாததால் உடன் வேலை பார்த்த கட்டடத் தொழிலாளர்கள் அவர்களை தேடத் துவங்கினர். பின்னர் 4 பேரும் கழிவுநீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களை காப்பாற்ற முயன்ற சந்தோஷ் என்பவர் மயக்கமடைந்தார்.
உடனே தொழிலாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இரவு நேரமாகிவிட்டதால் பாதுகாப்பு கருதி மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த தீயணைப்பு படையினர், இன்று காலையில் 4 பேரின் உடல்களையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஷவாயு தாக்கி மயக்க நிலையில் இருந்த சந்தோஷ் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பலியானவர்களில் மோகன், த்ருஷ் இருவரும் புனேயை சேர்ந்தவர்கள். முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களை மீத்தேன் வாயு தாக்கியதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications