''கேள்வி கேடும் முன்'': சரத்குமாருக்கு ஆற்காடு அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அஸ்ஸாம், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் வரையில் மின்சாரம் உபரியாக இருந்து மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்து கொண்டிருந்தோம். ஆனால் அக்டோபர் மாதம் முதல் காற்றாலைகள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் 1,500 மெகா வாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் 1,000 மெகா வாட்டும் (நெய்வேலியிலிருந்து கிடைக்க வேண்டிய 400 மெகாவாட் உட்பட) கிடைக்காத காரணத்தால், தற்போது தமிழகத்தில் தற்காலிகமாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக இவைகளை சீர்செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக முதற்கட்டமாக கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் மின்தடையே இல்லை என்ற நிலை உருவாக்கியிருக்கிறோம்.

கோவை, ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் மின் தடையை குறைத்திருக்கிறோம்.

கடந்த கால அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தி செய்வதற்கான பெரிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 5 ஆண்டுகளிலும் வெறும் 348 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்தார்கள். வருடத்திற்கு நமது தேவை 700 மெகாவாட் அளவிற்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து தான் 5வது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட கருணாநிதி ஆட்சியில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம்.

சரத்குமார், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இந்தியாவின் மின்சார பற்றாக்குறை 1 லட்சம் மெகா வாட் என்பதையும், சுதந்திரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்கு பின்னர், 1 லட்சத்து 24 ஆயிரம் கிராமங்கள் இன்னும் மின்சார வசதியே பெறவில்லை என்பதையும் அறிந்திருப்பார் என்று கருதுகிறேன்.

வீடுகளுக்கு மின்சாரம் தேவை என்று சிலர் விண்ணப்பிக்கும்போது 1,000 அல்லது 2,000 கிலோ வாட் தேவை என்று விண்ணப்பிக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் வீடு கட்டி முடிந்தவுடன், உதாரணத்திற்கு சரத்குமார் அவர் வீடு கட்டும்போது தனக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்று கேட்டாரோ அதைவிட 10 மடங்கு மின்சாரத்தை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குளிர்சாதன வசதிகள், வாஷிங் மெஷின், கிரைண்டர், காற்றாடி மற்றும் மின்சார மோட்டார் போன்ற பல அத்தியாவசிய வசதிகள் சரத்குமார் போன்றவர்களுக்கே செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதை குறையாகச் சொல்லவில்லை.

ஆனால் தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் நுகர்வோர் தங்களுக்கான வசதிகளை பெருக்கிக் கொள்ளும்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18 சதவீதம் மின்சாரம் அதிகமாக தமிழக மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் தான் இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடைக்குக் காரணம். இருந்தாலும், முதல்வர் கருணாநிதி அறிவுரைகளை ஏற்று கோடை காலத்தில் மின் தட்டுப்பாடே வராத அளவிற்கு அஸ்ஸாம், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து நமக்குத் தேவையான மின்சாரத்தை வாங்கி பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த அளவிற்கு மின்சார வசதி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களின் தலை நகரங்களிலேயே சுமார் 6 மணி நேரம் மின்சாரமே இல்லாமல் இருக்கிறது என்பது சரத்குமார் போன்றவர்களுக்கு தெரியாதா.

எனவே இதையெல்லாம் தெரிந்து கொண்டு இனிமேலாவது நண்பர் சரத்குமார் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது நல்லது என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+