ரவுடிகளின் முதல் புகலிடம் அரசியலாகிவிட்டது-ராமதாஸ்
சென்னை: ரவுடி, போக்கிரிகளின் கடைசி புகலிடமாக அரசியல் இருந்தது. ஆனால் இன்று ரவுடி, போக்கிரிகளின் ஆரம்பமே அரசியலாக உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் நாட்டில் பெருகி வரும் வன்முறைக் கலாச்சாரமும், அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதாவது,
வன்முறை கலாச்சாரத்திற்கு முக்கிய காரணம் அரசியல் தான் என்பது 100க்கு 100 உண்மை. அரசியல்வாதி-போலீஸ்-ரவுடி என்ற வட்டத்தை உடைத்தால் தான் வன்முறை கலாச்சாரத்திற்கு விடை காண முடியும்.
ரவுடி, போக்கிரிகளின் கடைசி புகலிடமாக அரசியல் இருந்தது. ஆனால் இன்று ரவுடி, போக்கிரிகளின் ஆரம்பமே அரசியலாக உள்ளது. அரசியல்வாதிகளின் பின்னால் 10, 20 தாதாக்கள் உள்ளனர். பணம், சொத்து சேர்க்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.
காவல்துறை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து முழுமையாக விலகி, சுதந்திரமாக, நேர்மையாக செயல்படவேண்டும். நீதித்துறை எந்தளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. இன்று ஒரு பாட்டில் விஸ்கி வாங்கிக் கொடுத்தால், ரவுடியை ரவுடி இல்லை என்று தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.
கிராமங்களில் உள்ள நிலைமையைப் பற்றி தான் சொல்கிறேன். அரசு தரப்பு சரியில்லாததால் தான் இந்த நிலை. எனவே, நீதித்துறையும், காவல்துறையும், அரசியலும் வன்முறை கலாச்சாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
மதுவை ஒழிக்கவில்லை என்றால், வன்முறை ஒழியாது. ஆண்டுக்கு ரூ.7,000 கோடி வருகிறது என்று அரசே மதுக்கடைகளை நடத்துகிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications