குடிசை மாற்று வாரிய வீடு இடிந்து பெண் காயம்
கரூர்: கரூரில் குடிசை மாற்று வாரிய வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
கரூர் - திருச்சி சாலையில் குழந்தானூர் அருகே தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதில் 112 வீடுகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டில் ரவிச்சந்திரன் என்வர் தனது மனைவி வானதி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வானதி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சம்பவத்தன்று பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்களுடன் அமர்ந்து வானதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேலே உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவு ஸ்லாப் திடீரென இடிந்து விழுந்தது. அது நேராக வானதி தலையில் விழுந்ததால் அவர் படு காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே கோவையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு இடிந்து பலர் பலியானார்கள். இந்த நிலையில் ஜன்னல் ஸ்லாப் இடிந்து விழுந்து கர்ப்பிணி படுகாயமடைந்ததால் கரூரில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications