மோடி தோற்கிறார்-என்டிடிவி எக்ஸிட் போல்

குஜராத் மாநில சட்டசபையில் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக செளராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 87 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாயின.
வாக்குப் பதிவு செய்துவிட்டு வந்தவர்களிடம் ஸ்டார் நியூஸ், என்டிடிவி, ஜீ டிவி ஆகியவை கருத்துக் கணிப்புகளை நடத்தின.
இதில் ஸ்டார் நியூஸ் டிவி-ஏசி நீல்சன் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 48 இடங்களும் காங்கிரசுக்கு 37 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட வாக்குப் பதிவிலும் இதே நிலை நீடித்தால் பாஜகவுக்கு 115 இடங்களும் காங்கிரசுக்கு 64 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், என்டிடிவி நடத்தியுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 40 இடங்களும், காங்கிரசுக்கு 43 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதில் செளராஷ்டிரா பகுதியில் தான் காங்கிரசுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என பாஜக முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் விடுத்த அழைப்புக்கு இப் பகுதியைச் சேர்ந்த படேல் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே போல 40 சதவீதம் பழங்குடியினர் வசிக்கும் தெற்கு குஜராத்தில் 14 இடங்கள் பாஜகவுக்கும் 12 இடங்கள் காங்கிரசுக்கும் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த தேர்தலிலும் இரு கட்சிகளும் அதே எண்ணிக்கையிலான இடங்களில் தான் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் செளராஷ்டிரா பகுதியில் பாஜக 39 இடங்களில் வென்றது. இப்போது அது 26 ஆகக் குறையும் என்றும், கடந்த தேர்தலில் 18 இடங்களில் வென்ற காங்கிரஸ் இப்போது 31 இடங்களில் வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது.
ஜீ டிவி-சி ஓட்டர் போல் ஆகியவை இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 46 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு கடந்த முறை கிடைத்ததைவிட 4 சதவீதம் அதிக வாக்குகளாகும்.
இம் முறையும் மதவாதத்தைத் தூண்டி விட்டு குளிர் காய நினைத்த மோடிக்கு எதிர்பார்க்கப்பட்ட ஆதரவு கிடைக்கவில்லை. குடிநீர், மின் கட்டணம், சாதிகள் விவகாரம், சட்டம்-ஒழுங்கு, பாஜக உட்கட்சிப் பூசல், விவசாயிகள் பிரச்சனை, பழங்குடியினருக்கு நிலம் தருவதாக சொல்லிவிட்டு ஏமாற்றியது ஆகிய உள்ளூர் பிரச்சனைகளே முக்கிய இடம் பிடித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் குறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பாஜகவை விட்டு விலகி வந்த முக்கிய நபர்களை பிடித்துப் போட்டு அவர்களுக்கு சீட்டும் கொடுத்ததோடு, ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சம் வசிக்கும் ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்தியது, பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களுடன் வெளிப்படையாகவே கைகோர்த்துக் கொண்டு பிரச்சாரத்தில் இறங்கியது காங்கிரஸ். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications