பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி
சென்னை: சென்னையில் நடைபாதையில் படுத்துத் தூங்கிய கட்டுமானத் தொழிலாளர்கள் மீது தாறுமாறாக வந்த கார் ஏறியது. இதில் 2 பேர் பரிபாதமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவருமே திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் ேசர்ந்தவர்கள்.
சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள்தான். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் சாலை போடும் பணி, கட்டுமானப் பணி, கிணறு தோண்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த 12 தொழிலாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இரவில் கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலையில் உள்ள வாட்டர் டேங்க் தெரு, பள்ளியரசன் தெரு சந்திப்பில் மின்சார வாரியம் எதிரில் உள்ள நடைபாதையில் படுத்துத் தூங்குவது வழக்கம். இதற்காக இங்கு கொட்டகை ஒன்றையும் போட்டுள்ளனர்.
இந்த நடைபாதையில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த சாலை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பாந்தாலி மருத்துவமனை வசிக்கும் பூசாரி வாஞ்சிநாதன் (23) என்பவர் காரின் எதிர் புறம் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது திடீரென காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று வேகமாக மோதியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டது. மேலும் கார் தாறுமாறாக ஓடி நடைபாதை மீது ஏறியது.
இந்த பயங்கர விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த, கலசப்பாக்கத்தை சேர்ந்த படவேட்டான் என்பவரின் மனைவி முனியம்மாள் (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார். படவேட்டான், சின்னப் பொண்ணு, தட்சணாமூர்த்தி, மற்றொரு தட்சணாமூர்த்தி, குப்பன், ஏழுமலை, நடராஜன், ராஜேஷ், அப்பன், தர்மா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கி பைக்கில் வந்த வாஞ்சிநாதனும் படுகாயம் அடைந்தார். அனைவரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று காலை இறந்தார். இவர் திருச்சங்கல் பகுதியை சேர்ந்தவர்.
விபத்து நடந்த இடம் போர்க்களம் போல ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. தொழிலாளர்கள் தூங்கிய கொட்டகை சின்னா பின்னமாகி விட்டது. சம்பவ இடத்துக்கு அண்ணாநகர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த விபத்தால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 20 வருடங்களாக அவர்கள் இங்கே தங்கியுள்ளனராம். இப்படி ஒரு விபத்து இதுவரை நடந்ததில்லைஎன்று அவர்கள் சோகத்துடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications