நெல்லை மாநாடு திருப்பம் தரும் - மு.க.ஸ்டாலின்

நெல்லையில் திமுக இளைஞர் அணி மாநாடு கோலாகலமாக இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. தமிழகமெங்கும் உள்ள திமுக தொண்டர்கள் நெல்லையை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாநாட்டு பந்தலை பார்த்த நெல்லை மாவட்ட மக்கள் அனைவரும் அதன் பிரம்மாண்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இதேபோன்று மாநாடு பந்தலை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்று பார்ப்பவர்கள் அனைவரும் கூறும் வண்ணம் சிறப்பு பெற்றுள்ளது.
இந்த மாநாட்டுக்கு 5 லட்சம் திமுக தொண்டர்கள் வருவார்கள் என்று திமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதிலிருந்தும் 10 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இளைஞர்களை முன் நிறுத்தும் மாநாடு என்பதால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் வகையில் பல நல்ல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
திமுக மாநாடு முக்கியத்துவமும், திருப்பம் தருவதாகவும், எழுச்சிமிக்கதாகவும், இளைஞர்களுக்கு உற்சாகத்தை தருவதாகவும் எப்போதும் அமையும். அந்த வகையில் திமுக இளைஞர் அணியினர் நடத்தும் இந்த மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
திமுக இளைஞர்களுக்கு ஏற்கனவே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. புதியதாக கொடுக்க வேண்டிய நிலை இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 100 க்கு 50 சதவீதம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். அமைச்சரவையில் நான் உள்பட பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.
மாநாடு குறித்து முதல்வர் என்னிடம் கூறும்போது, பந்தல் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களையும் பாராட்டினார். இது எங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அவர் மாநாட்டை ஒரு கட்டுப்பாடுடன் நடத்த வேண்டும்.
தலைமை பொறுப்பை நான் ஏற்பதற்காகத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று சிலர் எழுப்பும் யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications