7 மணி நேரம் நடந்த திமுக பேரணி
திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழச்சி தங்கப்பாண்டியன் கொடியேற்றினார். இள.புகழேந்தி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு பிரமாண்ட பேரணி, பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்திலிருந்து தொடங்கியது. மத்திய அமைச்சர் ராசா கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.
வெள்ளை நிற சீருடையில், சிவப்பு நிற டை அணிந்து மு.க.ஸ்டாலின் பேரணிக்குத் தலைமை தாங்கி திறந்த ஜீப்பில் சென்றார்.
யானைகள், குதிரைகள், தாரை, தப்பட்டைகள் முழங்க மாவட்ட வாரியாக தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். பேரணியின் தொடக்கத்தில் 6000 வண்ண பலூன்களை மு.க.ஸ்டாலின் பறக்க விட்டார்.
பேரணியில் கலந்து கொண்ட திருவண்ணாமலை திமுகவினர் 500 பேர் கருணாநிதி போலவும், 500 பேர் ஸ்டாலின் போலவும் மாஸ்க் அணிந்து வந்தது வித்தியாசமாக இருந்தது.
ஒவ்வொரு மாவட்ட திமுகவினரும் வித்தியாசமான கெட்டப்களில் வந்தது காண்போரைக் கவர்ந்திழுத்தது.
பேரணியில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது.
பேரணியை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த திருவாரூர் தேர் மாதிரியான மேடையில் அமர்ந்து முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். மாலை 6.45 மணி வரை கருணாநிதி பேரணியைப் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ஸ்டாலின் மேடையில் இருந்து பேரணியைப் பார்வையிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு பேரணி நடந்தது. இதன் காரணமாக நெல்லை நகரமே ஸ்தம்பித்துப் போனது. நகரின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு யாரும் போகக் கூட முடியாத அளவுக்கு திமுகவினர் வெள்ளமென போய்க் கொண்டிருந்தனர்.
காவியக் கலைஞர் - 84:
பின்னர் இரவு 8 மணிக்கு மாநாட்டுத் திடலில் காவியக் கலைஞர் 84 ஒளி, ஒலிக் காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சியை முதல்வர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மேடையில் அமர்ந்து பார்வையிட்டனர். லட்சக்கணக்கான திமுகவினரும் இதைக் கண்டுகளித்தனர்.
திருக்குவளையில் பிறந்தது முதல் இன்று வரை உள்ள முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் நாடகம் போல நடித்துக் காட்டப்பட்டது.
கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம், பாளையங்கோட்டை சிறை வாழ்க்கை ஆகியவற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
இன்று ..
2ம் நாளான இன்று காலை 8 மணிக்கு மாநாட்டு நிகழ்வுகள் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கின. 9.30 மணிக்கு வரவேற்பு குழு தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்பு நிகழ்த்தினார்.
10 மணிக்கு மாநாட்டு தலைவராக அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து வழி மொழியப்பட்டார். பின்னர் பத்தரை மணி முதல் சொற்பொழிவுகள் தொடங்கின. முதலி்ல மாநாட்டுத் திறப்பாளர் இள.புகழேந்தி பேசினார்.
தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன், மொழிப்போர் தியாகிகள் பட திறப்பாளர் அசன் முகமது ஜின்னா, மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் பேசுகின்றனர்.
பிற்பகல் 12.30 மணிக்கு மாநாட்டு தலைவர் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். இத்துடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3 மணிக்கு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிறப்பு தலைப்புகளில் எம்.பிக்கள், திருச்சி. சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர்.
இரவு 7 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வழிகாட்டுரை நிகழ்த்துகிறார். 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி சிறப்புப் பேருரையாற்றுகிறார்.













Click it and Unblock the Notifications