மாநாட்டைப் புறக்கணித்தார் அழகிரி - ஆந்திரா பயணம்!

முதல் முறையாக தங்களுக்குத் தரப்பட்ட மாநில மாநாட்டு வாய்ப்பை திமுக இளைஞர் அணியினர் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகப் பிரமாண்டமான மாநாட்டை நெல்லையில் அரங்கேற்றியுள்ளனர். தடபுடலான பேரணி நேற்று நடந்து முடிந்தது. இன்று காலை முதல் தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டும் விழா இது என்ற கருத்து திமுகவின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டத் தொண்டர்கள் வரை கருத்து நிலவுவதால், மாநாட்டில் எங்கு பார்த்தாலும் ஸ்டாலின் முழக்கமாகத்தான் உள்ளது.
மாநாடு அறிவிக்கப்பட்டது முதலே அழகிரியின் ஆட்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். மாநாட்டுப் பணிகளை முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளர்களே கையில் எடுத்துக் கொண்டு செய்து வந்தனர். மறந்தும் கூட அழகிரிக்கு ஆதரவானவர்கள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதனால் ஆரம்பத்திலிருந்தே அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர். மேலும் நெல்லை நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான கட் அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அழகிரியின் படங்களை வெகு அரிதாகத்தான் காண முடிகிறது.
இருப்பினும் அழகிரி இதுகுறித்து எந்தவிதக் கருத்தையும் ெதரிவிக்காமல் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில் சென்னையிலிருந்து முதல்வர் கருணாநிதி மதுரைக்கு வந்தபோது அவருடன் சேர்ந்து நெல்லைக்கு வந்தார்.
இருப்பினும் நேற்று முழுவதும் அவரை எங்கும் காணவில்லை. இதனால் நெல்லையில் இருக்கிறாரா அல்லது மதுரைக்குப் போய் விட்டாரா என்ற சந்தேகம் திமுகவினர் மத்தியில் எழுந்தது.
இருப்பினும் நேற்று மாலை வரை காணாமல் இருந்த அழகிரி திடீரென முதல்வர், திமுக பேரணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்தார். முதல்வர் குடும்பத்தினர் தனியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மேடைக்கு வந்த அவர் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார்.
இதே மேடையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோரும் இருந்தனர். கயல் விழிக்கு அருகே கனிமொழி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அங்கு இருந்த அழகிரி பின்னர் போய் விட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் அழகிரி திடீரென மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் ஆந்திராவுக்கு கிளம்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் சித்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்தே அழகிரி ஆந்திராவுக்குக் கிளம்பிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ஸ்டாலினுக்கு 'முடி சூட்டும்' விழாவில் பங்கேற்க மனம் இல்லாமல்தான் அழகிரி முன்கூட்டியே ஆந்திராவுக்குக் கிளம்பிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications