விமான தாக்குதலில் பங்கர் சரிந்து பிரபாகரன் காயம்!
கொழும்பு: இலங்கை விமானப்படை நவம்பர் 28ம் தேதி நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் லேசான காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த செய்தியை கொழும்பிலிருந்து வெளியாகும் தி நேஷன் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், கிளிநொச்சியில், நவம்பர் 28ம் தேதி விமானப்படையினர் நடத்திய ஒரு தாக்குதலில், ரகசிய பதுங்கு குழியில் இருந்த பிரபாகரன் காயமடைந்தார்.
28ம் தேதி பிற்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திர நகர் அருகே உள்ள பதுங்கு குழியில் அப்போது பிரபாகரன் இருந்தார்.
தாக்குதலில் அவருக்கு நேரடியாக எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் குண்டு வீச்சின்போது பதுங்கு குழி சரிந்ததால், அதில் சிக்கி காயமடைந்தார்.
காயத்தைத் தொடர்ந்து வன்னிப் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவான திலீபன் மெடிக்கல் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த செய்தி குறித்து ராணுவத் தரப்பிலோ அல்லது புலிகள் தரப்பிலோ எந்த தகவலும் இல்லை.
கடந்த மாதம் நடந்த விமானப்படைத் தாக்குதலில்தான் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications