வருசநாட்டில் நடந்த நக்சல் வேட்டை-பரபரப்பு தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

Pon Manickavel
தேனி: தேனி மாவட்டம் வருசநாட்டு மலைப்பகுதியில் நடந்த நக்சலைட் வேட்டை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராம மக்களின் உதவியால் 5 நக்சலைட்டுகளையும் பிடிக்க முடிந்ததாக தென் மண்டல காவல்துறை ஐஜி சஞ்சீவ் குமார் கூறியுள்ளார். அதிரடி எஸ்.பி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் துணிச்சலாக செயல்பட்டு ஐந்து பேரையும் பிடித்துள்ளனர்.

தேனி மாவட்ட வனப்பகுதிகள் நக்சலைட்டுகளின் புதிய கூடாரமாக உருவெடுத்துள்ளன. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின. நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நக்சலைட்டுளை ஒழிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இந்த வேட்டையில் சிலர் சிக்கினர்.

ஆனால் நேற்று வருசநாட்டு மலைப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் மூலம் நக்சலைட்டுகள் அங்கு ஆயுதங்களுடன் ஆழமாக ஊடுறுவியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வருசநாட்டு மலைப் பகுதியில் உள்ள மேல் பூசனூர் - பள்ளத்தூர் கிராமங்களுக்கு இடையே உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றுக்குள் நக்சலைட்டுகள் ஐந்து பேர் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடிப்படை எஸ்.பி. பொன் மாணிக்கவேல், தேனி எஸ்.பி. சுதாகர் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்தது. நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதை உறுதி செய்த கொண்ட போலீஸ் படை உள்ளே புகுந்து அவர்களைப் பிடிக்க முயற்சித்தது.

ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் நக்சலைட் கும்பலின் தலைவரான மகாலிங்கம் என்பவர் போலீஸாரை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மற்ற நக்சலைட்டுகளும் சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து போலீஸாரும் திரும்பிச் சுட ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மகாலிங்கம் உள்ளிட்ட 3 நக்சலைட்டுகள் காயமடைந்தனர். 2 பேர் துப்பாக்கிகளைப் போட்டு விட்டு சரணடைந்தனர்.

குண்டுக் காயமடைந்த 3 நக்சலைட்டுகளையும் முதலில் வருசநாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

கைதான இரு நக்சலைட்டுகளிடமிரும் பொன் மாணிக்கவேலும், சுதாகரும் தீவிர விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து கிளம்பி வந்த தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமாரும் நக்சலைட்டுகளிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்களின் முழு உதவியுடன்தான் நக்சலைட்டுகளைப் பிடிக்க முடிந்தது. கிராமத்தினர் மிகுந்த உஷாராக இருந்ததால் நக்சலைட்டுகளை அடையாளம் கண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

முதலில் நக்சலைட்டுகள்தான் துப்பாக்கியால்சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். 2 பேர் சரணடைந்தனர் என்றார்.

போலீஸ் விசாரணையில், சிக்கிய நக்சலைட்டுகளின் பெயர்கள் மகாலிங்கம் (52, தேனி மாவட்டம், தேவாரம் மேட்டுப்பட்டி), மருது என்கிற லெனின் (27, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அலம்பச்சேரி), முருகானந்தம் (27, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சேடியம்), பாலமுருகன் (25, மதுரை செல்லூர்), லோகேஸ்வரன் என்கிற சச்சின் (சட்டீஸ்கர் மாநிலம்) என்று தெரிய வந்துள்ளது.

இந்தக் கும்பலுக்கு மகாலிங்கம்தான் தலைவராக இருந்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு முன்பே உசிலம்பட்டி பகுதியில் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சி கொடுத்து சதி வேலைகளுக்கு ஆட்களைத் தயார்படுத்தி வந்துள்ளார்.

மேலும், மகாலிங்கம் மீது வேலூர் மாவட்டம் கூடப்பட்டு காவல் நிலையத்தில், ஒரு இரட்டைக் கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த 1978ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும்.
சட்டீஸ்கரைச் சேர்ந்த சச்சின், தமிழகத்தில் நக்சலைட் இயக்கத்தை வளர்ப்பதற்காக வந்த மாவோ தீவிரவாதி என்று தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மகாலிங்கம் தவிர மருது என்கிற லெனின், முருகானந்தம் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொன் மாணிக்கவேல் கூறுகையில், இது முழுக்க முழுக்க தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளின் உதவியுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை. ஏதோ நாடகத்திற்காக போடப்பட்டதல்ல.

என்கவுண்டர் என்ற பெயரில் ஆட்களைக் கொன்று விடுவதாக ஒரு மோசமான கருத்து உள்ளது. ஆனால் சத்தியமாக சொல்கிறேன், முதலில் மகாலிங்கம்தான் துப்பாக்கியால் சுட்டார். பதிலுக்குத்தான் நாங்கள் சுட்டோம்.

இந்த நடவடிக்கையை பரிசுகள் வழங்குகிறோம் என்று கூறி யாரும் கேவலப்படுத்தி விட வேண்டாம். சம்பளத்தைத் தவிர வேறு ஒரு பைசாவும் எங்களுக்கு வேண்டாம் என்றார்.

தற்போது இந்த வழக்கை கியூ பிரிவு போலீஸார் தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வருசநாட்டுப் பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+