எம்எல்.ஏ அலுவலத்தில் முதல்வர் படம் - திமுக கெடு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் திருச்செந்தூர், கானம், ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகங்களில் தமிழக முதல்வரின் படம் வைப்பது தொடர்பான சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இங்கு முதல்வர் படத்தை வருகிற 31ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என திமுக கெடு விதித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் திருச்செந்தூர், கானம், ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகங்களில் முதல்வரின் படத்தை வைக்கப்போவதாக திருச்செந்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மார்ச் 12ம் தேதி அறிவித்தார்.
திருசெந்தூர் எம்.எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட மூன்று பேரூராட்சி தலைவர்களும், அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இதனால் இங்கு முதல்வர் கருணாநிதி படத்தை வைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் 13ம் தேதி சமாதான கூட்டத்தை கூட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் அறையிலும் முதல்வரின் படத்தை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியதை அடுத்து சுரேஷ் தரப்பினர் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதே நேரத்தில் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் பட திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளாமான அதிமுகவினர் குவிந்தனர்.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் முடிந்த 9 மாதம் முடிந்த நிலையில் இப்போது மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. வரும் 31 தேதிக்குள் முதல்வர் படத்தை பேரூராட்சி அலுவலங்களில் வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தங்கள் தரப்பு முதல்வர் படத்தை வைக்கும் என்று கலெக்டர், எஸ்.பி. ஆகியோருக்கு திமுக கெடு விதித்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications