கொத்தடிமை: பெண்களை சித்ரவதை செய்த பாமக பிரமுகர்
விழுப்புரம்: சின்னசேலம் அருகே காட்டு வேலைக்கு பெண்களை கொத்தடிமைகளாக வைத்து சித்ரவதை செய்த பாமக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் குமார்(31). பாமக கிளைச் செயலாளரான இவருக்கு சொந்தமாக ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.
இவருடைய காட்டில் வேலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி சாந்தி(42). மகள்கள் புவனேஸ்வரி(17), அபிராமி(13), ரங்கசாமி என்பவரின் மனைவி கன்னியம்மாள்(45), மகள்கள் காவேரி(17), சத்யா(13) ஆகிய 6 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கு தினசரி ரூ.70 சம்பளம் பேசப்பட்டு அழைத்து வரப்பட்ட இவர்கள் வேலை முடிந்ததும் கூலி கேட்டதற்கு குமார் கட்டையால் அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த கன்னியம்மாள், சாந்தி இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொத்தடிமைகளாக சித்ரவதை தாங்க முடியாமல் குமார் மீது 6 பேரும் சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் கன்னியம்மாள் நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் 6 பேரும் திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள். விவசாய கூலி வேலை செய்து வந்த எங்களை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குமார் எங்களை அவரது ஊருக்கு வேலைக்கு அழைத்து வந்தார். அவருடைய பருத்திக் காட்டில் தினந்தோறும் வேலை செய்ய ரூ.70 கூலி பேசி வேலை வாங்கினார்.
வேலையில் சேருவதற்கு முன்னர் தலா ரூ.2,000 முன் தொகையாக கொடுத்தார். நாங்கள் தொடர்ந்து அவரது பருத்திக் காட்டில் வேலை பார்த்து வந்தோம். ஆனால் கூலி பணத்தை கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.
மேலும் அருகில் உள்ள பழனிமுத்து(49) என்பவரின் பருத்திக் காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எங்களை மிரட்டி வேலை செய்ய வைத்தார். பழனிமுத்துவும் எங்களை கொத்தடிமைகளாக நடத்தினார்.
அந்த காட்டில் வேலை முடிந்து வந்து குமாரிடம் கூலி பணம் கேட்டோம். வேலை முடிந்து விட்டதால் நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அவரிடம் பணம் கேட்டதற்கு அவர் கொடுக்க மறுத்ததுடன், நாங்கள் தான் பணம் தரவேண்டும் எனக் கூறி எங்களை தனி அறையில் சிறை வைத்தார்.
குமாரும், அவரது மனைவி செல்வியும் எங்களை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவர்களது சித்ரவதை தாங்கமுடியாமல் தான் போலீசில் புகார் செய்தோம் என்றார்.
சின்னசேலம் போலீசார் பாமக பிரமுகர் குமார், அவரின் மனைவி செல்வி, விவசாயி பழனிமுத்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாமக பிரமுகர் குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள செல்வி, பழனிமுத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications