கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்பு ஐம்பொன் சிலைகள் மீட்பு
நெல்லை: நெல்லை அருகே கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் அக்னீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சிலைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். சாமி சிலை கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி இந்தியன் ஆயில் காப்பரேசன் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்யும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முரளி என்பவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனக்கு ஷேர் மார்க்கெட்டில் ரூ. 7 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே ஒரு வங்கியில் கடன் வாங்கியதை அடைப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த சிவகுமார், கண்ணன் மற்றும் தெற்கு செழியநல்லூரை சேர்ந்த காளிராஜ் ஆகியோருடன் சேர்ந்து சிலைகளை திருடியதாக சொன்னார்.
இதில் சிவகுமாரும், கண்ணனும் தனியார் பஸ் கண்டக்டர்கள் ஆவர். இதன் பேரில் சிவகுமார், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து கொள்ளையர்களிடம் மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications