காலராவைத் தடுக்க முச்சந்தியில் பொங்கல்-ஆடு வெட்டி படையல்!
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராம மக்கள் முச்சந்தி பகுதியில் நேற்றிரவு ஆடு வெட்டி, பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இந்த வழிபாட்டினால் தொற்று நோய்கள் பரவாது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ளது குருவன்கோட்டை கிராமம். இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி செவ்வாய்கிழமை அன்று முச்சந்தி பொங்கல் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டு திருவிழா நேற்று இரவு நடந்தது.
இரண்டு தெருக்கள் சந்திக்கும் தெரு முனையில் (முச்சந்தி) பல குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து முக்கு முறிச்சி விழாவை கொண்டாடுகின்றனர். முச்சந்தியில் சுவாமி படங்களை வைத்து அதன் முன்பு அடுப்பு கூட்டி பனை ஓலைகளால் பொங்கல் வைத்து நாட்டுபாடல் பாடி வழிபாடு செய்கின்றனர்.
இதற்காக தெருக்கள் முழுவதும் மாவிலை, வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வீட்டு வாசலில் ஒரு மண் குவலையில் மஞ்சள் கலந்த பாலை ஊற்றி துணியால் மூடி கட்டி தொங்க விட்டனர். இந்த குவளையை அடுத்த ஆண்டு முக்குமுறிச்சி பொங்கல் விழாவின் போது அவிழ்ப்பர்.
இதேபோல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலிலும் பொங்கல் வைக்கப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் பொங்கலிட்டனர். இதற்காக ஊர் பொது மக்கள் சார்பில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி வழிபாடு செய்தனர்.
இந்த திருவிழா குறித்து ஊர் மக்கள் கூறும்போது ஆண்டு தோறும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் தெய்வங்களை மகிழ்விக்க முடிகிறது. மேலும் வீட்டு முன்பு மஞ்சள் பால், வேப்பிலை தோரணங்கள் கட்டுவதால் ஊருக்குள் கலரா போன்ற தொற்று நோய்கள் பரவாது என்பது எங்களின் ஐதீகம் என்றனர்.


Click it and Unblock the Notifications
