For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மது வெள்ளம் பாய்கிறது-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News


திருநெல்வேலி: தமிழகத்தில் மது என்ற வெள்ளம் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த 1958ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் மணிமுத்தாறு அணையை அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார்.

அந்த விழாவில் பேசிய காமராஜர் தமிழகத்தில் பெரிய நதிகள் எதுவும் இல்லை. எனவே பெரிய அளவிலான அணைகளை கட்டி பயன்பெற வழியில்லை. சிறிய சிறிய அணைகளையும், வெள்ளநீரை தடுக்க தடுப்பணைகளையும் கட்சி பாசன வசதியை பெருக்க வேண்டும் எனக் கூறினார்.

அவர் கூறிவிட்டு போன திட்டத்தை 50 வருடங்கள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் இதுபற்றி பேசுகிறார்களே தவிர செயல்படுவதில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப ரூ.306 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இது புதிய திட்டம் கிடையாது.

இந்த திட்டத்துக்காக ரூ.198 கோடி மதிப்பிடப்பட்டது. இன்று அதே திட்டத்தை நிறைவேற்ற ரூ.306 கோடிக்கு மேல் செலவாகும் என்கிறார்கள். அந்தளவுக்கு இந்த திட்டம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் தாமிரபரணி, காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் கடலில் வீணாக கலக்கிறது. கடந்த ஆண்டு 7 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. 75 டிஎம்சி நீர் கடலில் கலந்துள்ளது.

ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகத்திடம் நாம் கெஞ்சியுள்ளோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் அடம்பிடித்துள்ளது. இதனால் பயிர்கள் கருகியுள்ளன.

இந்த வருடம் 75 டிஎம்சி தண்ணீரை வீணாக்கியுள்ளோம். உபரி நீரை சேமிக்க காவிரியிலும், கொள்ளிடத்திலும் காமராஜர் 50 வருடங்களுக்கு முன்பு கூறியது போல் சிறிய அணைகளை கட்டியிருந்தால் தமிழகத்தின் வறட்சி மாவட்டங்கள் பலன் பெற்றிருக்கும்.

வெள்ளக்காலத்தில் தடுப்பணைகளை கட்டுவோம் என்று சொல்பவர்கள் பின்னர் அதை மறந்துவிடுகிறார்கள். எனவே காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீரை பயன்படுத்த வெள்ளநீரை சேமிக்க புதிதாக இணைப்பு பாசன கால்வாய்களை கட்டவேண்டும்.

இதற்கு மாநிலம் தழுவிய ஒரு மாஸ்டர் பிளானை ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது. கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி முதல் 2007 ஆகஸ்ட் 31ம் தேதி வரை டாஸ்மாக் நிறுவனம் 7 கோடியே 11 லட்சத்து 57 ஆயிரத்து 687 பெட்டிகள் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவற்றையும், 4 கோடியே 47 லட்சத்து 78 ஆயிரத்து 373 பெட்டிகள் பீர் பாட்டிலையும் விற்றுள்ளது.

ஒரு பெட்டிக்கு 10 லிட்டர்கள் என்றால் மொத்தம் 110 கோடியே 60 லட்சம் லிட்டராகும். அந்தளவுக்கு தமிழகத்தில் மது என்ற வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

2 டிஎம்சி தண்ணீர் இருந்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்கலாம்.

மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டும். முதலில் 6,000 பார்களை மூடுங்கள். 2வதாக கடைகளின் எண்ணிக்கையை பாதியாகவும், அடுத்து வேலை நேரத்தையும் குறையுங்கள். இப்படி செய்தால் 5 ஆண்டுகளில் மதுவிலக்கை கொண்டு வந்துவிட முடியும்.

மாநில நெடுஞ்சாலைகள் ஒரு மழைக்கு கூட தாங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் போடும் சாலைகள் ஏன் பழுதடைகின்றது என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X