தட்கல் டிக்கெட் ரூல்ஸ்! டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா? எவ்வளவு பிடிப்பார்கள்?
சென்னை: ரயில் பயணங்களில் தட்கல் டிக்கெட் எடுப்பது என்பது ஒரு பெரிய போர்க்களத்திற்குச் சமமாக உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே அனைத்து சீட்களும் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. பயணிகளின் விவரங்களை டைப் செய்து முடிப்பதற்குள்ளேயே போதிய நேரம் வீணாகிவிடுவதால், பலருக்குக் கடைசி நேரத்தில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தத் தட்கல் சிக்கலைத் தவிர்த்து, மிக விரைவாக கன்பார்ம் டிக்கெட் பெறுவதற்கான சில வழிமுறைகளை சுருக்கமாக பார்ப்போம்.
புக்கிங் செய்யும்போது, பயணிகளின் பெயர், வயது போன்ற விவரங்களை ஆன்லைனில் டைப் செய்து முடிப்பதற்குள்ளேயே 30 முதல் 45 வினாடிகள் வரை வீணாகிவிடுகிறது. இதனால் பலருக்குக் கடைசி நேரத்தில் ஏமாற்றமே கிடைக்கிறது.. இதற்கு பெஸ்ட் வழி, மாஸ்டர் லிஸ்ட் வசதியாகும்.

தட்கல் முன்பதிவு
அதன்படி பயணிகள் தட்கல் முன்பதிவு தொடங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே, தங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் உள்ள "மை ப்ரொஃபைல்" பகுதிக்கு சென்று, யணம் செய்யவிருக்கும் பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஒரே கிளிக்கில் பயணிகளின் பெயர்களை தேர்ந்தெடுத்து, நேரத்தைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.
அடுத்தபடியாக, தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது பணம் செலுத்தும் முறையில் ஏற்படும் தாமதமே பலரது டிக்கெட்டுகள் கைநழுவி போக முக்கிய காரணமாக அமைகிறது. வங்கி கார்டுகளை உள்ளிடுவதோ அல்லது ஒடிபி மெசேஜுக்காக காத்திருப்பதோ தட்கல் நேரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
அதனால் உடனடிப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ அல்லது ஐஆர்சிடிசி வாலட் வசதியை பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. வாலட்டில் முன்கூட்டியே தேவையான பணத்தை இருப்பு வைத்திருப்பதன் மூலம், ஒரே கிளிக்கில் கொஞ்சமும் லேட் செய்யாமல் பணத்தை செலுத்திவிடலாம். மேலும் புக்கிங் தொடங்குவதற்குச் சரியாக இரண்டு நிமிடங்களுக்கு முன்பு லாகின் செய்வதன் மூலம் "செஷன் அவுட்" ஆகாமல் தப்பிக்கலாம்.
2 ஆப்ஷன் பாக்ஸ்
டிக்கெட் முன்பதிவு பக்கத்தின் கீழே இருக்கும் 2 ஆப்ஷன் பாக்ஸ், பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.. "உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே முன்பதிவு செய்யவும்" (Book only if confirmed berths are allotted) என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தட்கல் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டால் தேவையற்ற வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் புக் ஆவதைத் தடுத்து, பண பிடித்தத்தையும் தவிர்க்கலாம்.
அதேபோல், "தானியங்கு மேம்படுத்தல்" அதாவது Auto Upgradation ஆப்ஷனைத் தேர்வு செய்யும்போது, ஸ்லீப்பர் வகுப்பில் இடம் கிடைக்காத பட்சத்தில், ஏசி வகுப்பில் ஏதேனும் காலியிடம் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி மேல் வகுப்பு இருக்கையைப் பெறவும் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சாதாரண தட்கல் வகுப்புகள்
சாதாரண தட்கல் வகுப்புகளில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில், பயணிகள் பிரீமியம் தட்கல் முறையை நாடலாம். இதில் கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்றாலும், போட்டி குறைவாக இருப்பதால் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்
அதேசமயம், கன்பார்ம் ஆன தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் திரும்பக் கிடைக்காது என்ற பொதுவான விதி நடைமுறையில் உள்ளது. ஆனால் நாம் முன்பதிவு செய்த ரயில் புறப்பட வேண்டிய நேரத்திலிருந்து 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாக வந்தால், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ரத்து செய்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.
டெக்னிக்கல் பிரச்சனை
அதேபோல தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்த பிறகும், தொழில்நுட்பக் காரணங்களால் நாம் கோரிய வகுப்பில் ரயில்வே நிர்வாகத்தால் சீட்களை ஒதுக்க முடியாமல் போனாலோ அல்லது பயணிக்கு அவர் புக் செய்த வகுப்பை விடக் குறைந்த வகுப்பில் மாற்று இருக்கை வழங்கப்பட்டு, அதில் அவருக்குப் பயணம் செய்ய விருப்பமில்லை என்றாலோ டிக்கெட்டை கேன்சல் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்குப் பயணிகள் 'டிடிஆர்' (TDR) எனப்படும் டிக்கெட் டெபாசிட் ரசீதைத் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும்.
அதே நேரத்தில், சாதாரண முறையில் முன்பதிவு செய்யப்பட்ட கன்பார்ம் டிக்கெட்டுகளைப் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்யும்போது, எந்தெந்த வகுப்பிற்கு எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விபரங்களையும் பயணிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கேன்சல் டிக்கெட் பணம் கிடைக்குமா
ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை (2S) கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் தங்களின் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ஒரு டிக்கெட்டிற்கு 60 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இதேபோல், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி (Sleeper Class) கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது 120 ரூபாயும், குளிர்சாதன வசதி கொண்ட ஏசி பெட்டிகளின் (AC Coaches) பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 200 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும்.
முதல் வகுப்பு ஏசி பெட்டி (First Class AC) மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் (Executive Class) பயணிக்கும் பயணிகள் மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும் பயணிகளுக்கு 240 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும் என்று ரயில்வே விதிமுறைகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications