பாம்பனில் விடுதலைப் புலி கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போர் உக்கிரமடைந்து வருவதால், தமிழ கடலோரப் பகுதிகளில், குறிப்பாக, ராமேஸ்வரம் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் தமிழக கியூ பிரிவு போலீஸார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களில் வைகுண்ட கணேசன் (38) என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர். ராஜு என்கிற செல்வராஜ் (முத்துப்பேட்டை), ராபர்ட் (பாம்பன்), சார்லஸ் (தங்கச்சிமடம்) ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வைகுண்ட கணேசன், இலங்கையிலிருந்து அகதியாக வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவருடன் யாரும் உடன் வரவில்லை. எந்த உடமையையும் அவர் கொண்டு வரவில்லை. இதனால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, விடுதலைப் புலிகளுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்க வந்ததாக தெரிவித்தார்.
அவருக்கு மற்ற 3 பேரும் உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். வைகுண்ட கணேசன் வைத்திருந்த ரூ. 90 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications