போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் - தடைகளை நீக்க வேண்டும்: புலிகள்

Subscribe to Oneindia Tamil


கிளிநொச்சி: போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலகியிருப்பதன் மூலம், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தை உலக நாடுகள் அங்கீகரித்து, தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழ உதவ வேண்டும், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும். நார்வே தனது சமரச முயற்சிகளைத் தொடர வேண்டும் என விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஸ்ரீலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்

2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டதையடுத்து நாம் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ராணுவ வெற்றிகளைக் குவித்து படை வலுச் சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமானது போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்வந்தது.

இதனடிப்படையில் போர்நிறுத்த ஒப்பந்தமானது 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைகள் காரணமாக அழிவுக்குள்ளாகியிருந்த தமிழீழ தாயகத்தில் போர் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையினை எமது மக்கள் அனுபவிப்பதற்கு வழிகோலுவதற்கும் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் அத்திவாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இது கைச்சாத்திடப்பட்டது.

தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இராணுவ வலயங்கள் அகற்றப்பட்டு, அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மூடப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்துப் பிரதான பாதைகளான ஏ-9 யாழ்-கண்டி, செங்கலடி-பதுளை வீதிகள் திறக்கப்பட்டன.

பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் குடியிருப்புக்கள் ஆகியனவற்றிலிருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி மற்றும் மீன்பிடித் தடைகளை முழுமையாக நீக்கி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தமிழர் பிரதேசத்தில் நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைகளிலும், சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் மற்றும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தம்மால் இயன்றவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இலங்கையின் தொடர் மீறல்:

ஸ்ரீலங்கா அரசோ அல்லது ஸ்ரீலங்காப் படையினரோ போர்நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக செயற்படுத்தி இயல்பு வாழ்க்கையை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கால வரையறைகளுக்கு அமைய மேற்கொள்ளாது தொடர்ந்தும் தனது போர்நிறுத்த மீறல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமிருந்தன.

அவ்வாறிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசுடன் 2002 செப்டெம்பர் முதல் 2003 மார்ச் வரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதனது படைகளும் போர்நிறுத்த உடன்படிக்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரத்துகளை தொடர்ச்சியாக மீறிவருவது தொடர்பாக அனுசரணையாளர்கள், கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

ஸ்ரீலங்கா அரசானது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை மீறியது மட்டுமன்றி, பேச்சுவார்த்தை மேசைகளில் இணக்கம் காணப்பட்ட உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கான உப குழு, பகைமைத் தணிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான உப குழு போன்ற குழுக்கள் செயற்பட முடியாதவாறு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு அமைதி முயற்சிகளைப் பலவீனப்படுத்தியது.

போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை, போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முயற்சிகளின் ஒரு தரப்பாகிய விடுதலைப் புலிகளை சம தரப்பாக நடத்துவதற்குத் தவறியமை ஆகிய காரணங்களால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்தோ அல்லது சமாதான முயற்சிகளிலிருந்தோ முற்றிலுமாக வெளியேறாது, தொடர்ந்தும் நோர்வே அரசின் அநுசரணையுடன் சமாதான வழிகளிலே ஒரு நிரந்தரமான அமைதித் தீர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வகையில், பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காகவும் தமிழர் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தைக் கொண்டுவந்து போரினால் பேரழிவுக்குட்பட்டிருந்த தமிழர் தாயகப் பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்துவதற்காகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓரு முன்மொழிவினை முன்வைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.

ஸ்ரீலங்கா அரசு முன்வைத்த இடைக்கால நிர்வாகத்திற்கான முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கூடத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனால், விடுதலைப் புலிகள் நார்வேயின் அனுசரணையுடன், பல நாடுகளிலுமுள்ள சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை முன்வைத்தனர்.

உடன்பாட்டை உதாசீனப்படுத்திய இலங்கை:

ஸ்ரீலங்கா அரசானது பேச்சுவார்த்தைக்கான ஓர் அடிப்படையாகக்கூட இதனை ஏற்கமறுத்தது. இதன் காரணமாக, பேச்சுவார்த்தைக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு ஏதுவாக, விடுதலைப் புலிகள் நோர்வே மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைய எடுத்த முயற்சிகள் எந்தவிதப் பலனையும் தந்துவிடவில்லை.

இதேபோலவே ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பினையும் சிறிலங்கா அரசானது வழமை போலவே குப்பைக்கூடைக்குள் வீசியது.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் எள்ளளவும் கருத்தில் எடுக்காது, சிறிலங்கா அரசானது தமிழர் தாயப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடராக மேற்கொண்டு மனித அவலத்தினை ஏற்படுத்திநின்ற வேளையில், மீண்டும் நோர்வே அனுசரணையாளர்களும் சர்வதேச சமூகமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் ஜெனிவாவில் 2006ம் ஆண்டு இரு தடவைகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள்.

இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளின்போதும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

அத்துடன், விடுதலைப் புலிகள் தாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா அரசாங்கமானது போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு சரத்தான ஏ-9 வீதியினைத் திறந்து யாழ். குடாநாட்டில்; போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு திறந்தவெளிச் சிறச்சாலையில் அடைபட்டது போன்று அவலப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் அவலங்களை நீக்குவதற்கு முன்வரவேண்டும் என மனிதாபிமான ரீதியில் வேண்டுகோள் விடுத்த போதிலும் ஸ்ரீலங்கா அரசாங்கமானது இக்கோரிக்கையினை நிராகரித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை முயற்சிகள் மீண்டும் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் விளங்கிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசானது படுகொலை செய்தபோதிலும் கூட விடுதலைப் புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு எதனையும் எடுக்கவில்லை.

ஸ்ரீலங்கா அரசானது தற்போது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து எதுவிதமான நியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாக விலகிவிட்டது.

நார்வே சமரசம் தொடர வேண்டும்:

இந்நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையினை வரிக்கு வரி அமுல்படுத்தி அதனை நூறு வீதம் கடைப்பிடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணைப் பணியினை நோர்வே அனுசரணையாளர்களே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

சிங்கள இனவாத அரசுகள் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் நிரந்தர அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒப்பந்தங்கள் அனைத்தையுமே நடைமுறைப்படுத்தாது உதாசீனப்படுத்தியதே வரலாறாகும்.

தமிழ் மக்கள் நிரந்தரமான அமைதியுடன் தமது தாயக பூமியிலே சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதுமே இடமளிக்கமாட்டார்கள் என்பதை தற்போது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அண்ணளவாக ஆறு வருடங்கள் நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கையினை முறித்தமை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்:

எனவே சர்வதேச சமூகம் இதனைப் புரிந்துகொண்டு, சிறிலங்கா அரசுகளின் பொய்ப் பிரசாரத்திற்கு எடுபட்டு விடுதலைப் புலிகள்மீது விதித்திருக்கும் தடைகளை உடனடியாக நீக்கி, தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை ஏற்று, அவர்களின் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழுவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹன் சோல்வ்பெர்க், கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனை சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்த அறிக்கையை வெளியிட்ட நடேசன், நார்வே தனது சமரசப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+