கோவையில் பிடிப்பட்ட செல்போன் கொள்ளையர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டனர்
தூத்துக்குடி: கோவை மாவட்டத்தில் பிடிபட்ட 6 செல்போன் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டனர்.
கோவை மாவட்டம், காட்டூர் போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதியன்று தமிழகத்தை கலக்கிய செல்போன் கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர்.
இதில் பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கம்பளி விற்பனை செய்பவர்கள் போல் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பீர் குமார் பிரசாத், லால்பாபு பிரசாத், உமாசங்கர், குட்டூ குமார், சுனில் குமார் சிங், மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 6 பேரையும் காட்டூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் கோவை போலீசார் நடத்திய விசாரனையில், தூத்துககுடியில் கடந்த 2007 அக்டோபர் 15ம் தேதியன்று நடந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான கேமரா செல்போன்கள் கொள்ளை சம்பவத்திலும், மறுதினம் அக்டோபர் 16ம் தேதி தென்காசியில் நடந்த செல்போன் கொள்ளை சம்பவத்திலும் இவர்களுக்குத் தொடர்புள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மத்திய பாகம் குற்றப்பிரிவு போலீசார் 6 கொள்ளையர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
செல்போன் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். இதற்காக நேற்று கோவை மத்திய சிறையில் 6 கொள்ளையர்களும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹோமந்த்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், அவர்கள் 6 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்தார்.
செல்போன் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை முன்னிட்டு தூத்துக்குடி நிதிமன்ற வாளகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications