ஜெ. மீதான 'ஸ்பிக்' ஊழல் வழக்கு: பைசல் ஆனது

கடந்த 1991-1996ல் ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு நிறுவனமான டிட்கோவிடமிருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள் திருப்பி கொடுக்கப்பட்டன.
அரசின் இந்த செயலால் தமிழக அரசுக்கு ரூ. 28 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
மேலும், ஜெயலலிதாவும், ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி.முத்தையா ஆகியோர் ரூ. 28 கோடி பணத்தை நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு அப்பீல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
அதேசமயம், சென்னை தனி நீதிமன்றத்தில் ஸ்பிக் நிறுவன பங்கு ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.
இந்தச் சூழ்நிைலயில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன், தனி நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து விட்டது. எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த தமிழக அரசு விரும்பவில்ைல என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான முடிவை இன்று தெரிவிப்பதாக நீதிபதிகள் சிங்காரவேலு, தர்மராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரமணியசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சார்பில் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கும்படி கோரினார்.
இருப்பினும் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும், அரசுத் தரப்பில், வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்ைல என்று கூறி விட்டதால் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்து பைசல் செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம் ஜெயலலிதாவும், ஏ.சி.முத்தையாவும் ரூ. 28 கோடி பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications