மதவாத அரசியலுக்கு எதிராக உறுதியான போர்: காரத் அறைகூவல்
மதுரை: மதவாத அரசியலை எதிர்த்து இடதுசாரிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து உறுதியான போர் தொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் நடந்து வந்த 19வது மாநில மாநாட்டின் நிறைவு நாளில் நிறைவுரை ஆற்றினார் காரத். அப்போது அவர் பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விருந்துக்கு வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழகத்தில் மதவாத சக்திகளின் கூட்டணி உருவாகப் போவதையே காட்டுகிறது.
தமிழகத்தில் மதவாத அரசியல் உருவெடுக்காமல் தடுக்கும் முயற்சியில், இடதுசாரிகளும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து உறுதியாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்த போரில் குதிக்க வேண்டும்.
மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு திமுக அரசு தலைமை வகிக்க வேண்டும்.
மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது, பொறுத்துக் கொள்ளாது. அது பெரும்பான்மை ஹிந்துத்துவாவாக இருந்தாலும் சரி, சிறுபான்மை அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, மதவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
குஜராத்தில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் 2ம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள்.
மத்தியில், 3வது மாற்று அணி அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பாடுபடும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் கட்சிகள் தேசிய அளவில் மாற்று அணியை உருவாக்க முன்வர வேண்டும்.
இருப்பினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என்றார் காரத்.
வரதராஜன் மீண்டும் தேர்வு:
முன்னதாக நடந்த கூட்டத்தில், தமிழ் மாநில மார்க்சிஸ்ட் செயலாளராக வரதராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 3வது முறையாக அவர் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications