பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு நீல வண்ணம்-அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களில் இள நீல நிறம் பூசப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் விபத்தில் சிக்குவதும், மாணவ, மாணவியர் காயமடைவதும், சில நேரங்களில் உயிர்ப்பலி நேருவதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இதைத் தடுக்க பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு தனி வண்ணம் பூச தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளி, கல்லூரி வேன்கள், பேருந்துகளுக்கு இள நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.
வாகனங்களின் முன்னும், பின்னும், பள்ளி அல்லது கல்லூரி வாகனம் என எழுதப்பட வேண்டும்.
இதேபோல பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களின் பின்புறமும், முன்புறமும் இது மாணவர்கள் செல்லும் வாகனம் என எழுதப்பட்ட அட்டை அல்லது போர்டை தொங்க விட்டிருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் அடுத்த முறை தகுதிச் சான்றிதழுக்கு (எப்.சி) வரும்போது இந்த மாற்றங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications