திமுக ஆட்சியில் சில குறைபாடுகள் உள்ளன-தா.பாண்டியன்
திருச்சி: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் சில குறைபாடுகள் உள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு கூட்டம் ஜனவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. மாநில மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
இதில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் மார்ச் இறுதியில் நடக்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒரே இடத்தில் 40-50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு அரசால் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் 15,000 கூலிப் படையினர் உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். அந்த சமூக விரோத பட்டியலில் உள்ளவர்கள், கட்சி சார்பு உடையவர்களாக இருந்தால், அவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும், அந்தந்தக் கட்சியினர் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.
இதை நல்ல சந்தர்ப்பமாக கருதி அவர்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஜனநாயகம், அமைதி நிலவும்.
தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகளின் கோரிக்கையான நெல் குவிண்டால் ரூ.1,000 என்ற விலையை உடனடியாக மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
காங்கிரஸ், பாஜக இல்லாத கம்யூனிச கொள்கை அடிப்படையிலான ஆரோக்கியமான 3வது அணி தேவை. தமிழகத்தில் இப்போதைக்கு கூட்டணி அடிப்படையில் மாறுதல் கிடையாது.
ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் சில குறைபாடுகள் உள்ளன. ரேஷன் அரசி கடத்தல், மணல் கொள்ளை, வேலைக்கு லஞ்சம், சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு ஆகியவை தமிழகத்தில் நடந்து வருவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும். இந்த நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications